புதுடெல்லி,
இந்திய கால்பந்து அணி வருகிற 21-ந் தேதி பக்ரைன் தலைநகர் மனாமா செல்கிறது. அங்கு வருகிற 23 மற்றும் 26-ந் தேதிகளில் நடைபெறும் சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் இந்திய அணி, முறையே பக்ரைன், பெலாரஸ் அணிகளுடன் மோதுகிறது. இந்த இரண்டு ஆட்டங்களும் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.
உக்ரைன் மீது போர் தொடுத்து இருக்கும் ரஷியாவுக்கு ஆதரவாக பெலாரஸ் இருப்பதால் அந்த அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பங்கேற்குமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
இந்த நிலையில் பக்ரைனில் நடைபெறும் சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டிக்கான இந்திய அணியில் இருந்து 37 வயது முன்கள வீரரும், கேப்டனுமான சுனில் சேத்ரி விலகி இருக்கிறார்.
இது குறித்து இந்திய கால்பந்து சம்மேளன இணையதளத்துக்கு சுனில் சேத்ரி அளித்துள்ள பேட்டியில், ‘பக்ரைனில் நடக்க இருக்கும் இரண்டு நட்புறவு கால்பந்து போட்டிகளை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தேன். இந்த போட்டியை தவற விடுவது எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தற்போதைய நீண்டகால சீசனில் நான் சில சிறிய காயங்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.
அது குணமடைவதற்கு நேரம் தேவைப்படுகிறது. மே மாதம் நடைபெறும் பயிற்சி முகாமுக்கு முன்பாக குணமடைய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்’ என்று தெரிவித்துள்ளார். சுனில் சேத்ரியின் விலகல் இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.