அபுதாபி,
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அபுதாபிக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எதிகாத் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;-
“அபுதாபியில் அரசு சார்பில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சில கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை அபுதாபி சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை புரியும் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.
தற்போது இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை புரியும் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்படுகிறது. தேவைப்படுவோர் தங்கள் செலவில் பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொள்ளலாம். இதற்கு கட்டணம் 40 திர்ஹாமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் விமான நிலையத்தின் வருகை பகுதியில் செய்யப்பட்டுள்ளது. அதேபோல குறிப்பிட்ட வெளிநாடுகளில் இருந்து வருகை தருவோர் அந்தந்த நாடுகளில் இருந்து எடுக்கப்படும் வழக்கமான பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்து கொண்டு வர வேண்டும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.