திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து அரசியல் ஆலோசகர் ஐபேக் பிரசாந்த் கிஷோர் பணியாற்றி வந்தார். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் மம்தாவின் முயற்சிக்கு பிரசாந்த் கிஷோர்தான் மூளையாக செயல்பட்டு வந்தார். ஆனால், சமீபத்தில் மேற்கு வங்க மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது தொடர்பாக ஐபேக் பிரசாந்த் கிஷோருக்கும், மம்தா பானர்ஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக செய்தி வெளியானது. பிரசாந்த் கிஷோர் இல்லாமல் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். மேலும், மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜியின் கட்டுப்பாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரம் சென்றது.
இதற்கும் பிரசாந்த் கிஷோர்தான் காரணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து மம்தா பானர்ஜி தலையிட்டு கட்சியின் கமிட்டியை கலைத்துவிட்டு புதிய கமிட்டியை அறிவித்தார். இதனால் பிரசாந்த் கிஷோர், மம்தா பானர்ஜியிடமிருந்து விலகி இருந்தார். இந்த நிலையில், கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார். இதனால் மம்தாவுக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது என்ற கூற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதில் புதிய நிர்வாகிகள் சிலரை மம்தா பானர்ஜி அறிவித்தார். புதிய கமிட்டியில் இளம் தலைவர்களும், பழம்பெரும் தலைவர்களும் கலந்த கலவையாக இடம் பெற்றுள்ளனர். இதில் பேசிய மம்தா பானர்ஜி, “கட்சியை வடகிழக்கு மாநிலங்களில் வளர்க்கவேண்டும். மத்தியில் பா.ஜ.க-வை எதிர்த்து அனைத்து தலைவர்களும் ஒன்று சேரவேண்டும்” என்று தெரிவித்தார். மம்தாவின் முயற்சிக்கு பிரசாந்த் கிஷோர் துணையாக இருப்பார் என்று திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.