புதுடெல்லி: ஜல்லிக்கட்டில் அனைத்து வகை மாடுகளையும் அனுமதிக்க வேண்டும் எனக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்; வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும். நாட்டு மாடுகளுக்கு பெரிய திமில் இருக்கும் என்பதால் அதனை ஜல்லிக்கட்டு வீரர்கள் பிடிக்க வசதியாக இருக்கும். வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளுக்கு திமில் இருப்பதில்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதியளிக்கும் வகையில் 2017ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டத் திருத்தத்தில், நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையிலும், தமிழக கலாசார பண்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும்; வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகளை பங்கேற்க அனுமதிக்க கூடாது. நாட்டு மாடுகள் இனப்பெருக்கத்துக்கு மாநில அரசு ஊக்கம் அளிக்க வேண்டும்; செயற்கை கருத்தரித்தல் முறையை தவிர்க்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்த்து, இன்று தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் குமணன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில், ‘செயற்கை கருவூட்டல் முறை குறித்த முக்கிய அம்சங்களை சென்னை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. ஜல்லிக்கட்டில் அனைத்துவகை மாடுகளையும் சேர்க்க அனுமதிக்க வேண்டும். நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தார். இம்மனு மீதான விசாரணை விரைவில் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.