சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு பால்நிலை சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கப் பிரிவு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (08) பாராளுமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்தின் நூலகத்தில் நிறுவப்பட்டுள்ள பால்நிலை சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கப் பிரிவு, பாராளுமன்ற வரலாற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் உட்பட பல புத்தகங்கள் மற்றும் பெண்கள் ஆய்வுகள் பற்றிய ஆவணங்களையும் கொண்டுள்ளது.
பாலின சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவை நம் நாட்டில் நீண்டகாலமாக உணரப்பட்டுவரும் விடயங்கள் விடயங்கள் என்றும், இந்நாட்டில் பெண்களை வழிநடத்துவதில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பெரும் முயற்சியை எடுக்க முடியும் என்றும் இங்கு கலந்துகொண்டு உரையாற்றிய சபாநாயகர் தெரிவித்தார். ஐக்கிய அமெரிக்க சர்வதேச உதவித் திட்டத்தின் (யூஎஸ்எயிட்) இலங்கைக்கான பணிப்பாளர் திரு.ரீட்.ஜே.ஏஷ்லிமன் வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு கௌரவ சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.
கௌரவ சபாநாயகரின் உரையைத் தொடர்ந்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான கௌரவ வைத்தியகலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே கருத்துக்களைத் தெரிவித்தார். பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் சாதனைகள் மற்றும் முன்னேற்றம் தொடர்பில் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர எடுத்துரைத்தார்.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், சபை முதல்வரும் அமைச்சருமான கௌரவ. தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, பாராளுமன்ற செயலக பணியாளர்கள், யூஎஸ்எயிடின் இலங்கைக்கான பணிப்பாளர் மற்றும் தேசிய ஜனநாயக நிறுவனத்தின் (NDI) பிரதிநிதிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.