கீவ்,
உக்ரைன் மீது ரஷியா இன்று 14-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில் ரஷிய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. இந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது.
இதற்கிடையில், போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் இந்த மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மீட்பு நடவடிக்கை மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்த ஆஸ்மா ஷபிக்யூ என்ற பெண்ணை இந்தியா மீட்டுள்ளது. தன்னை மீட்டதற்கு உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் பாகிஸ்தான் பெண் ஆஸ்மா நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆஸ்மா கூறுகையில், வணக்கம் என் பெயர் ஆஸ்மா ஷபிக்யூ. நான் பாகிஸ்தானை சேர்ந்தவள். உக்ரைனில் மிகவும் கடுமையான சூழ்நிலையில் சிக்கித்தவித்த என்னை மீட்பதில் உதவிய கீவ்வில் உள்ள இந்திய தூதரகத்த்ற்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எங்களை ஆதரித்ததற்கு நன்றி. இந்திய தூதரகத்தால் நான் நிச்சயம் பாதுகாப்பாக எனது வீட்டிற்கு செல்வேன் என எனக்கு நம்பிக்கை உள்ளது’ என தெரிவித்துள்ளார்.