சமூக வலைதளங்கள் வந்த பிறகு மோசடிகளும் அதிகரித்துவிட்டன. நட்பு கோரிக்கை விடுத்து அதை ஏற்கும் பெண்களிடம் திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்லி லட்சக்கணக்கில் பணத்தைப் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. மும்பையில் அது போன்ற ஒரு மோசடியில் 68 வயது மூதாட்டி சிக்கி ஏமாந்திருக்கிறார். மும்பையில் வசிக்கும் 68 வயது மூதாட்டி ஒருவருக்கு அவரது பேஸ்புக்கில் செபஸ்டியான் என்ற பெயரில் ஒரு நட்பு கோரிக்கை வந்திருக்கிறது. தான் லண்டனில் கட்டுமானத்தொழில் செய்து வருவதாக அந்த நபர் குறிப்பிட்டிருந்திருக்கிறார். அதனால் அவரின் நட்பு கோரிக்கையை மூதாட்டியும் ஏற்றுக்கொண்டார். பின்னர், இருவரும் போன் நம்பர்களைப் பகிர்ந்து கொண்டு அடிக்கடி சாட்டிங் செய்து வந்திருக்கின்றனர். பேஸ்புக் நண்பர் மூதாட்டியிடம் உங்களைத் திருமணம் செய்து லண்டனுக்கு அழைத்துச் செல்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். அதை மூதாட்டி நம்பியிருக்கிறார். அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த நபர், “நமது எதிர்காலத்திற்குப் பணம் சேமித்து வைக்கவேண்டும்.
எனவே உங்கள் வங்கி விவரங்களை அனுப்பி வையுங்கள்” என்று மூதாட்டியிடம் கேட்டிருக்கிறார். மூதாட்டியும் தன் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ஏ.டி.எம் கார்டு போன்றவற்றை செபஸ்டியனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதை பயன்படுத்தி செபஸ்டியன் மூதாட்டியின் வங்கிக் கணக்கிலிருந்து 11 லட்சத்தை எடுத்துக்கொண்டார். வழக்கம் போல் மூதாட்டி வங்கியில் பணம் போடச் சென்ற போதுதான் அதிலிருந்து 11 லட்சம் எடுத்திருப்பது தெரியவந்தது. உடனே இது குறித்து பேஸ்புக் நண்பரிடம் கேட்டதற்கு, அவசரமாகப் பணம் தேவைப்பட்டது. அதனால் எடுத்துக்கொண்டேன் என்று சொல்லிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி இது குறித்து போலீஸில் புகார் செய்தார். இது குறித்து விசாரிக்க டி.சி.பி ரேஷ்மி கராந்திகர் தலைமையில் தனிக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தீவிர விசாரணை நடத்தி செபஸ்டியனை டெல்லியில் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ரேஷ்மி கூறுகையில், “செபஸ்டியன் வேறு ஒருவரின் புகைப்படத்தை பேஸ்புக் பக்கத்தில் வைத்து மூதாட்டிக்கு நட்பு கோரிக்கை விடுத்திருக்கிறான். மூதாட்டியின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு திருமணம் செய்து இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளான்.
அதோடு இங்கிலாந்திலிருந்து தங்கம், வெளிநாட்டு கரன்சியை அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறான். ஆனால், அவை வரிப் பிரச்னையால் விமான நிலையத்தில் பிடிபட்டுவிட்டதாகத் தெரிவித்திருக்கிறான். நமது எதிர்கால தேவைக்கு உங்களது வங்கிக் கணக்கில் பணம் சேமிக்கவேண்டும் என்று கூறி மூதாட்டியிடம் வங்கி விவரங்களை கூரியர் மூலம் பெற்றுள்ளான். அந்த கூரியரை டெலிவரி செய்யப்படுவதற்கு முன்பு செபஸ்டியன் மடக்கி வாங்கிக் கொண்டான். அதன் மூலம் மூதாட்டியின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டான். குற்றவாளி டெல்லியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே டெல்லிக்கு தனிப்படை சென்று வாடகை வீட்டில் தங்கியிருந்த நைஜீரியாவைச் சேர்ந்த செபஸ்டியனை கைது செய்தது. அவனிடம் விசாரித்தபோது, மாணவர் விசாவில் இந்தியாவிற்கு வந்ததாகத் தெரிவித்துள்ளான். மூதாட்டியின் செல்போன் நம்பர் அவரது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படாததால் செபஸ்டியன் பணம் எடுத்தபோது அறிவிப்பு வரவில்லை” என்று போலீஸ் அதிகாரி ரேஷ்மி தெரிவித்தார்.