ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மிக நீண்ட அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு பேரறிவாளன் பிணையில் விடுதலையாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பேரறிவாளனின் சட்டப்பூர்வ விடுதலை சுமார் பத்தாண்டுகளுக்கு முன் 2014-ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மாநில அரசு விரும்பினால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளுக்கு உட்பட்டு விடுதலை செய்யலாம் என்று கூறியிருந்தது. அதன்படி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய அப்போதைய அரசு முடிவு செய்த போது, அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்போதைய மத்திய அரசு வழக்கு தொடர்ந்ததால் தான் பேரறிவாளனின் விடுதலை 10 ஆண்டுகளாக தாமதம் ஆகிறது.
அதன்பிறகும் கூட, பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், அவரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதனடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை 09.09.2018 அன்று தமிழக அமைச்சரவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
ஆனால், அதன்பின் 900 நாட்கள் கழிந்த நிலையில், அது குறித்து தம்மால் முடிவெடுக்க முடியவில்லை என்று கூறி, 7 தமிழர் விடுதலை குறித்த கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டதாக ஆளுனர் மாளிகை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. 7 தமிழர்களை விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லாத நிலையில் அதை தாமதப்படுத்துவதற்காக நடந்த முயற்சி தான் இது என்பதில் ஐயமில்லை.
இவ்வளவு தடைகளுக்குப் பிறகும் பேரறிவாளன் நடத்திய மிக நீண்ட சட்டப்போராட்டத்தின் பயனாகவே அவருக்கு இப்போது பிணை வழங்கப்பட்டிருக்கிறது. பேரறிவாளனுக்கு பிணை வழங்கக்கூடாது என்று மத்திய அரசின் சார்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதிலும் கூட, அதை புறந்தள்ளிவிட்டு, பேரறிவாளனின் சிறை நடத்தை, சிறையில் படித்து பட்டங்களைப் பெற்றது, பரோல் காலத்து நடத்தை, உடல்நல பாதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மனித உரிமைகளை காக்கும் வகையிலான உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் சிறப்பானது; பாராட்டத் தக்கது ஆகும்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என நான்கு ஆண்டுகளுக்கு முன்பே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்ட பிறகும் கூட, குடியரசுத் தலைவருக்கு மட்டும் தான் அந்த அதிகாரம் இருப்பதாக மத்திய அரசுத் தரப்பில் மீண்டும், மீண்டும் வலியுறுத்தப்படுவது தான் பேரறிவாளனின் நிரந்தர விடுதலைக்கு தடையாக உள்ளது. அதுகுறித்து விரிவாக விசாரித்து தீர்ப்பளிக்கப் போவதாக நீதியரசர் நாகேஸ்வரராவ் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு அறிவித்துள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு தான் உண்டு என்பதை இன்றைய விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதியரசர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை செய்யப்பட்டுவதற்கு ஆயிரமாயிரம் நியாயங்கள் உள்ளன. அவை அனைத்தையும் உச்சநீதிமன்றம் ஆய்வு செய்து நல்லத் தீர்ப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை பாமகவுக்கு உண்டு. அடுத்த சில வாரங்களில் பேரறிவாளனும், அவரைத் தொடர்ந்து பிற தமிழர்களும் நிரந்தரமாக விடுதலை ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதற்கு முன்பாகவே, 7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்து, அவர்களை விடுதலை செய்வதன் மூலம் தமிழக ஆளுனர் மாளிகை இந்த விஷயத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொள்ளலாம்” என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.