புதுடெல்லி:
நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தபோது நடுவழியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது.
இந்த விமானத்தில் 178 பயணிகள் மற்றும் 15 விமான ஊழியர்கள் இருந்தனர். புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே அந்த விமானம் கடத்தப்பட்டது. இந்தியாவின் பல்வேறு துறை பிரபலங்கள் அந்த விமானத்தில் இருந்ததால் நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தானில் இயங்கும் ஹர்கத் -உல்-முஜாகிதின் தீவிரவாத குழுவை சேர்ந்த 5 பேர் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தினர். அந்த விமானம் முதலில் அமிர்தசரஸ் விமான தளத்தில் தரை இறக்கப்பட்டது. பின்னர் பாகிஸ்தானில் உள்ள லாகூர் விமான நிலையத்துக்கு சென்றது. பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்க மறுத்ததால் தீவிரவாதிகள் அந்த விமானத்தை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய் விமான நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அந்த விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. அதன்பிறகு இறுதியாக ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகார் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.
இதனால் விமானத்தை கடத்திய 5 தீவிரவாதிகளும் இந்திய சிறையில் உள்ள தங்கள் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாத தலைவர்களை விடுவித்தால்தான், பயணிகளை விடுவிப்போம் என்ற தங்களது கோரிக்கையில் உறுதியாக இருந்தனர். இதன் காரணமாக மத்திய அரசு வேறு வழியின்றி அவர்களின் கோரிக்கையை ஏற்க நேரிட்டது.
இந்திய சிறையில் இருந்த மசூத் அசார், முஸ்தாக் அகமது சர்க்கார், அகமது உமர் ஆகிய 3 தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தனி விமானத்தில் கந்தகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பிறகுதான் கடத்தப்பட்ட விமானத்தை பயணிகளுடன் மத்திய அரசால் மீட்க முடிந்தது.
இந்த கடத்தலில் 17 பயணிகள் காயம் அடைந்தனர். டாக்டர் ரூபின் காட்யால் என்பவர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். இந்த கடத்தல் 7 நாட்கள் நீடித்தது.
இந்த நிலையில் விமானத்தை கடத்திய தீவிரவாதிகளுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி பாகிஸ்தானில் கடந்த 1-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த தீவிரவாதியின் பெயர் ஜாகூர் மிஸ்திரி இப்ராகிம்.
விமானத்தை கடத்திய 5 கடத்தல்காரர்களில் மிகவும் கொடூரமாக கருதப்பட்டவன் இந்த ஜாகூர் மிஸ்திரி இப்ராகிம் என்பவன்தான். இவன் கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் கராச்சி நகரில் கிரெசன்ட் பர்னிச்சர் என்ற பெயரில் கடை நடத்தி வந்தான்.
அவன் ஜாகித் அகுத் என்ற போலி பெயரில் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பாதுகாப்பு அளித்து வந்தது.
இந்த நிலையில் முகமூடி அணிந்த 2 மர்ம மனிதர்கள் கடையில் இருந்த ஜாகூர் மிஸ்திரியை துப்பாக்கியால் தலையில் சரமாரியாக சுட்டனர். இதில் அவன் குண்டுபாய்ந்து பலியானான்
இந்த சம்பவம் கடந்த 1-ந் தேதி நடந்துள்ளது. இந்த கொலை சம்பவம் முதலில் மறைக்கப்பட்டது. உள்ளூர் சேனல் ஒன்று தொழில் அதிபர் கொலை என்று எந்த விவரமும் தெரியாமல் செய்தி வெளியிட்டது.
பின்னர்தான் இந்திய விமானத்தை கடத்துவதற்கு மூளையாக செயல்பட்ட ஜாகூர் மிஸ்திரி இப்ராகிம் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான் என்று தற்போது தெரியவந்துள்ளது.
அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து ஜாகூர் மிஸ்திரியை சுட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விமானம் கடத்தலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகளில் 2 பேர் ஏற்கனவே இறந்துவிட்டனர். ஒருவன் நோய்வாய்பட்டு இறந்தான். மற்றொருவன் 2001-ம் ஆண்டு இந்திய பாராளுமன்றம் மீது தாக்குதலில் ஈடுபட்டபோது கொல்லப்பட்டான். தற்போது கடத்தலுக்கு முக்கிய பங்கு வகித்த ஜாகூர் மிஸ்திரி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளான். இப்ராகிம் அசார் மற்றும் ரவுப் ஆகிய 2 பேர் மட்டுமே இன்னும் உயிருடன் உள்ளனர்.