திருப்பத்தூர்: சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான கிபி 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று திருப்பத்தூர் அடுத்த கொரட்டி கிராமத்தில் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர். க. மோகன் காந்தி தலைமையிலான ஆய்வுக் குழுவினர் திருப்பத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக பல்வேறு கள ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பத்தூரை அடுத்த கொரட்டி கிராமத்தில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான நடுகல்லினை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து பேராசிரியர் முனைவர்.க.மோகன்காந்தி கூறியதாவது, “திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் 10 கி.மீ., தொலைவில் கொரட்டி என்ற கிராமம் இருக்கிறது. அங்குள்ள ஏரியின் தெற்கு கரையில் 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக்களுடன் கூடிய நடுகல் ஒன்றை நாங்கள் கண்டெடுத்தோம். இந்த நடுகல் 5 அடி அகலமும், 3 அடி உயரமும் கொண்ட பலகைக் கல்லில் வட்டெழுத்துக்களுடன் காணப்படுகிறது.
அதில் நடுகல் வீரனின் உருவம் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. வீரனின் முகம் வலது பக்கம் நோக்கியவாரு வடிவமைக்கப்பட்டுள்ளது. வீரனின் வாரி முடிக்கப்பட்ட கொண்டையும் வலது பக்கம் சாய்ந்த வண்ணம் காணப்படுகிறது.
வீரனின் வலது கையில் குறுவாளும் இடது கையில் அழகிய கோலத்துடன் வில் ஒன்றும் காணப்படுகிறது. அந்த வீரனின் கழுத்தில் ஒரு அம்பும், மார்பில் ஒரு அம்பும் பாய்ந்துள்ளதை போல சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடுகல்லில் இடம் பெற்றுள்ள எழுத்துக்கள், அழகான வரிக்கு வரி கோடுகளுடன், ஏழு வரிகளில் எழுதப்பட்டுள்ளது. அவை வட்டெழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. இதன் காலம் கி.பி. 8-ம் நூற்றாண்டு. பெரும்பாணர் அரசர்களின் வீரன் ஆலம்பட்டு ஆட்டு மந்தையை கவர்ந்து செல்ல ‘பெரியந்தை நீலனார்’ என்ற வீரன் அந்த ஆட்டு மந்தையை மீட்டு இறந்தான் என நடுகலில் உள்ள வாசகம் எடுத்துரைக்கிறது.
இந்த நடுகலில் இருக்கும் வாசகங்கள் புதிய சில வரலாற்று செய்திகளைப்பற்றி பேசுகிறது. பெரும்பாணர் என்ற அரச பரம்பரையினரை பற்றி திருப்பத்தூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதல் நடுகல் இது தான். மாட்டு மந்தையைப் பற்றி பல நடுகற்கள் இருக்கும் போது, இந்த நடுகல் ஆட்டு மந்தையைப் பற்றி பேசுகிறது. ஆநிரைகள் (மாடு, ஆடு), தங்கும் இடத்தை குறிப்பதாகும். பட்டி (ஆலம்பட்டி) என்ற சொல்ல அரிதினும் அரிதாக இதில் காணப்படுகிறது.
தன் ஊர் ஆட்டு மந்தையை பகைவர் கைக்கொள்ள அவர்களை எதிர்த்து போரிட்டு உயிர் விட்ட வீர மறவனுக்காக இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. இதனைத் தற்போது திக்கியம்மன் என்ற பெயரில் ஊர்மக்கள் ஆடி மாதம் பொங்கல் வைத்து, கிடா வெட்டி சிறப்பு பூஜைகள் செய்து படையிலிட்டு வழிபடுகின்றனர்.
சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான இந்த நடுகல், இன்றளவும் தெய்வமாக வணங்கப்பட்டு வருது குறிப்பிடக்கதக்கது. இது போன்ற வரலாற்று தடயங்களை மாவட்ட தொல்லியல் துறையினர், மாவட்ட நிர்வாகத்தினர் பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும்” .இவ்வாறு அவர் தெரிவித்தார்.