கொல்கத்தா: சட்டப்பேரவையில் நடந்த அமளியை முதல்வர் மம்தா கை தட்டி ரசித்தார் என ஆளுநர் ஜெகதீப் தன்கர் குற்றம் சாட்டினார். மேற்கு வங்கத்தில் கடந்த திங்களன்று சட்டப்பேரவை பட்ஜெட் தொடர் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் உரையாற்றினார். அப்போது, உள்ளாட்சி தேர்தலில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து பாஜ உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், உரையை வாசிக்க ஆளுநர் மறுத்தார். அவரை முதல்வர் மம்தா கைகூப்பி வணங்கி வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து, உரையின் முதல் மற்றும் கடைசி வரிகளை மட்டும் படித்து ஆளுநர் தன் உரையை முடித்தார்.இந்த அமளியின் போது உரையை தொடர்ந்து படிக்கும்படி ஆளுநரை ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த பெண் எம்எல்ஏ.க்கள் கோஷமிட்டு வலியுறுத்தினர். இதற்காக பெண் எம்எல்ஏ.க்களை மம்தா பாராட்டினார்.இந்நிலையில், மம்தாவின் பேச்சு அடங்கிய வீடியோவை இணைத்து ஆளுநர் தன்கர் டிவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘சட்டப்பேரவை முதல் நாள் கூட்டத்தின்போது அமைச்சர்களும், ஆளும் கட்சி உறுப்பினர்களும் கிட்டத்தட்ட என்னை முற்றுகையிட்டு நின்றனர். பாரம்பரியமிக்க சட்டப்பேரவை அரங்கில் இதுபோன்று நிகழ்ச்சிகள் நடைபெறுவதை யாரும் நியாயப்படுத்தக் கூடாது. இது எங்கே செல்கிறது? எதற்காக முதல்வர் கை தட்டி ரசித்தார். அமளியை பார்த்து கை தட்டி மகிழ்ந்தாரா? ஜனநாயகம் மலருவதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார். ஏற்கனவே, மம்தாவுக்கும் ஆளுநருக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் மோதல் நிலவி வரும் நிலையில், தன்கார் கூறியுள்ள இந்த குற்றச்சாட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.2 பாஜ எம்எல்ஏ சஸ்பெண்ட்: சட்டப்பேரவையில் ஆளுநர் தன்கார் உரையாற்றிபோது, நடாபாரி தொகுதி பாஜ எம்எல்ஏ மிகிர் கோஸ்வாமி, புருலியா தொகுதி பாஜ எம்எல்ஏ சுதிப் முகோபத்யாய் ஆகியோர் கடும் அமளியில் ஈடுபட்டனர். கையில் பதாகைகள் வைத்துக் கொண்டு முழக்கமிட்டனர். இவர்களை பட்ஜெட் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யும்படி சட்டப்பேரவை விவகாரங்கள் துறை இணையமைச்சர் பர்தா சட்டர்ஜி தீர்மானம் கொண்டு வந்தார். இது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.