உக்ரைன் போரில் கலந்துகொள்ளும் பிரித்தானிய ராணுவ வீரர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருப்பதாக பிரித்தானிய பாதுகாப்பு செயலர் பென் வாலஸ் எச்சரித்துள்ளார்.
இதுவரை பிரித்தானிய இராணுவ வீரர்கள் நால்வர் உக்ரைன் துருப்புகளுக்கு ஆதரவாக போரிட்டு வருவதாக குறிப்பிட்ட பென் வாலஸ், அவர்கள் நாடு திரும்பினால் அவர்கள் மீது இராணுவத்தைவிட்டு வெளியேறிய குற்றத்திற்காக வழக்கு தொடரப்பட்டு, தண்டனை வழங்கப்படும் என்றார்.
பணியில் இருக்கும் இராணுவ வீரர்கள் விடுப்பு ஏதும் பதிவு செய்யாமல் தன்னிச்சையாக உக்ரைன் புறப்பட்டு சென்றவர்கள் இராணுவ நடவடிக்கைக்கு இலக்காவார்கள் எனவும் பென் வாலஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பிரித்தானியர்கள் தற்போதைய சூழலில் கண்டிப்பாக உக்ரைன் செல்ல வேண்டாம் எனவும், அங்கு உண்மையான போர் நடந்து வருகிறது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
மட்டுமின்றி, பணியில் இருக்கும் இராணுவத்தினரில் எவரொருவர் உக்ரைனுக்கு சென்றிருந்தாலும், நாடு திரும்பியதும் அவர்கள் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்பது உறுதி என்றார்.
மேலும், பிரித்தானிய முன்னாள் இராணுவத்தினரும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்றே பென் வாலஸ் கோரியுள்ளார்.
இதனிடையே, ஆப்கானிஸ்தானில் போரிட்ட சுமார் 150 முன்னாள் பிரித்தானிய இராணுவ வீரர்கள் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்க பதிவு செய்துள்ளனர்.
இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என பிரித்தானிய வெளிவிவகார செயலர் Liz Truss அறிவித்துள்ளார்.
ஆனால், அவரது முடிவுக்கு போரிஸ் அரசாங்கம் இதுவரை ஆதரவளிக்கவில்லை என்பதுடன், பிரித்தானியர்கள் கண்டிப்பாக எல்லை தாண்ட வேண்டாம் என்றே வலியுறுத்தி வருகிறது.
மேலும், உக்ரேனிய இராணுவத்தின் அழைப்பை ஏற்று போரிட பிரித்தானிய இராணுவத்தினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.