இருளில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டிய நாய். கோபமடைந்த யானை பிளிறியதால் மக்கள் வீட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர்.
கோடை காலம் துவங்கி விட்ட நிலையில், வனத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தின், மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வனத்தினுள் ஏற்பட்டு வரும் வறட்சி காரணமாக காட்டை விட்டு வெளியேறும் யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன.
இந்நிலையில் நேற்றிரவு வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டுயானை சாலையை கடந்து சமயபுரம் என்ற ஊருக்குள் புகுந்தது. இருளில் குடியிருப்பு பகுதியின் வீதி வழியே உள்ளே நுழைய முயன்ற மிகப்பெரிய உருவத்துடன் காணப்பட்ட யானையை கண்ட அங்கிருந்த தெரு நாய் யானையை பின் தொடர்ந்து பலமாக குலைத்தது. இதனால் கோபடைந்த யானை நாயை விரட்டியடிக்க அதனை நோக்கி ஆக்ரோஷமாக பிளிறியது.
இதனால் அதுவரை யானையின் வருகையை அறியாமல் வீதியோரம் உள்ள வீட்டின் வெளி திண்ணைகளில் படுத்திருந்தவர்கள் உஷாரடைந்து அலறியடித்தபடி வீட்டினுள்ளும் பாதுகாப்பான இடங்களுக்கும் தப்பியோடினர். நாயின் விடா முயற்சியால் யானையின் வருகையை அறிந்த மக்கள் கடைசி நேரத்தில் தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.
கோடை காலத்தில் எந்த காரணத்தை கொண்டும் வனப்பகுதியை ஒட்டியுள்ள ஊர் மக்கள் யாரும் இரவு நேரத்தில் வீட்டின் வெளியே பாதுகாப்பின்றி உறங்குவதோ கைகளில் டார்ச் லைட் இன்றி நடமாடுவதோ கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM