சான்டியாகோ:உடையில் ஒன்பது பாம்புக் குட்டிகள், ௪௩ பல்லிகளை மறைத்து வைத்திருந்தவரை, அமெரிக்க எல்லை பாதுகாப்பு போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோ நகரம், மெக்சிகோ நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு, சமீபத்தில் லாரி ஒன்று வேகமாக வந்தது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருத்த போலீசார், லாரியை நிறுத்தும்படி கூறினர். ஆனால், லாரி நிற்கவில்லை.
இதையடுத்து விரட்டிச் சென்று லாரியை மடக்கிய போலீசார், அதிலிருந்த டிரைவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர். அவரிடம் நடத்திய சோதனையின் போது, அவர் அணிந்திருந்த ஜெர்கின், சட்டை மற்றும் பேன்ட் பாக்கெட்களில் ஏதோ ஊர்வது போல் தெரிந்தது. சந்தேகம் அடைந்த போலீசார், சட்டை, பேன்ட் மற்றும் ஜெர்கின்களில் உள்ள பாக்கெட்களை சோதனையிட்டனர். அதில் பாம்பு குட்டிகள் மற்றும் பல்லிகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் அவரது இடுப்பிலும் பாம்பு குட்டிகளை கட்டியிருந்தார். மொத்தம், ௪௩ பல்லிகள், ஒன்பது பாம்பு குட்டிகளை அவர் மறைத்து வைத்திருந்ததை கைப்பற்றிய போலீசார், டிரைவரை கைது செய்தனர்.விசாரணையில், அவர் இவற்றை மெக்சிகோவுக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது.
Advertisement