நடிகை ஸ்ருதி ஹாசன் எப்போதும் தெலுங்கு சினிமாவுக்கு லக்கி சார்ம் என்றே சொல்லலாம். இவர் தெலுங்கில் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். உதாரணத்திற்கு, பவன் கல்யாணுடன் நடித்த ‘கப்பர் சிங்’, ரவிதேஜாவுடன் ‘பலுபு’, ராம் சரணுடன் ‘எவடு’, மகேஷ்பாபுவுடன் ‘ஶ்ரீமந்துடு’, அல்லு அர்ஜுனுடன் ‘ரேஸுகுர்ரம்’ ஆகியவை. சமீபத்தில், கோபிசந்த் இயக்கத்தில் ரவி தேஜாவுடன் இவர் நடித்த ‘க்ராக்’ படமும் நல்ல ஹிட். ஏற்கெனவே, பவன் – ஸ்ருதி ஜோடி ஹிட்டடித்ததால், ‘வக்கீல் சாப்’ படத்தில் ஸ்ருதியை கேமியோ ரோலில் படத்திற்குள் கொண்டுவந்தனர்.
சினிமா ஒரு பக்கம், இசையொரு பக்கம் என ஸ்ருதி எப்போதும் தன்னை பிஸியாகவே வைத்திருக்கிறார். இந்தியில் இவர் நடித்த ‘பெஸ்ட்செல்லர்’ எனும் வெப் சீரிஸ் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கிறது. இப்போது அவர்வசம் மூன்று படங்கள் இருக்கின்றன. மூன்றும் தெலுங்கு படங்கள். ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’. பேன் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடி ஸ்ருதி ஹாசன்தான். இதில் ப்ரித்விராஜ் வில்லனாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பு நிறைவடையும் தறுவாயில் இருக்கிறது. ‘புஷ்பா’ எப்படி படப்பிடிப்பு ஆரம்பித்தவுடன் இரண்டு பாகங்களாக வெளியிடலாம் எனத் திட்டமிட்டார்களோ அதே போல, ‘சலார்’ படத்தையும் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
‘அகண்டா’ ப்ளாக்பஸ்டருக்குப் பிறகு, பாலகிருஷ்ணா நடிக்கும் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தப் படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதி. இதனை கோபிசந்த் மல்லினேனி இயக்குகிறார். ஏற்கெனவே, கோபிசந்த் இயக்கத்தில் இரண்டு படங்கள் நாயகியாக ஸ்ருதி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பக்கா ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகிவரும் இப்படத்தில் மலையாள நடிகர் லால் முக்கியமான கதாபாத்திரத்திலும் கன்னட நடிகர் துனியா விஜய் வில்லனாகவும் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். நிச்சயம் பாலையா – ஸ்ருதி காம்போவில் எனர்ஜெடிக் பாடல் ஒன்று கன்ஃபார்ம் ! (பாலையா டான்ஸ் பார்க்க ச்சால வெயிட்டிங்கு….)
இன்னொரு பக்கம், சிரஞ்சீவிக்கு ஜோடியாக புது படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். முதல்முறையாக சிரஞ்சீவியும் ரவிதேஜாவும் இணைந்து இப்படத்தில் நடிக்கின்றனர். இயக்குநர் பாபி என்று செல்லமாக அழைக்கப்படும் கே.எஸ்.ரவிந்திரா இயக்கத்தில் உருவாகும் இப்படம் கடலை பின்னணியாகக் கொண்டு உருவாகும் மாஸ் படம். தேவி ஶ்ரீ பிரசாத் இசை, ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு என கலக்கலான டீமுடன் இந்தப் படத்தின் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. பாபி சிம்ஹா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் சிரஞ்சீவி – ஸ்ருதி காம்போவில் ‘அம்முடு லெட்ஸ் டு கும்முடு…’ போல ஒரு ஜாலியான ஸ்டைலான கலக்கல் டான்ஸ் நிச்சயம் இருக்கும்.
இந்தியில் வெப்சீரிஸ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் படங்கள் என பிஸியாக இருக்கும் ஸ்ருதி, அடுத்து தமிழில் எப்போது நடிக்கப்போகிறார் என்ற கேள்வி சினிமா ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
நம்ம ஊருக்கு எப்போ வருவீங்க ஸ்ருதி?