மத்திய அரசின் எதிர்ப்பை ஏற்க மறுப்பு: பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மத்திய அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அவர் மாதம் ஒருமுறை ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991-ம் ஆண்டு சென்னையை அடுத்த பெரும்புதூரில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனையும், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரலில் தமிழக ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார். அதேபோல 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

கடந்த 2014-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழகஅரசு, பேரறிவாளன் உள்ளிட்ட7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய முடிவெடுத்தது. பல்வேறுகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு கடந்த 2018செப்டம்பரில் 7 பேர் விடுதலைதொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ராஜீவ் காந்திகொலை வழக்கில் பெல்ட் வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்பதால் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து, விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பேரறிவாளன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் தலைமையிலான அமர்வில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள், ‘‘ராஜீவ் காந்தி கொலை வழக்கின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறியே மத்திய அரசு வழக்கு விசாரணையை இழுத்தடித்து வருகிறது. தமிழக அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது அதிருப்தி அளிக்கிறது’’ என தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்திருந்தனர்.

இதனிடையே, சிறுநீரகத் தொற்று காரணமாக உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள தனது மகன்,30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனையை அனுபவித்து வருவதால், அவருக்கு பரோல் வழங்க வேண்டும் எனபேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த ஆண்டு மே மாதம் மனு அளித்தார். அதையடுத்து அவருக்கு 30 நாட்கள் பரோல்வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்டஇடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த பேரறிவாளனுக்கு 9-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், பேரறிவாளன் தொடர்ந்திருந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேரறிவாளன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி, ‘‘பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றிய பிறகும்கூட ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதுதொடர்பான கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பியுள்ளார்.

பேரறிவாளன் தற்போது பரோலில் இருந்தாலும் அவரால் சுதந்திரமாக வெளியே சென்றுநண்பர்களையோ, உறவினர்களையோ சந்திக்க முடியவில்லை. வீட்டிலும் தனிமைச் சிறையில்தான் உள்ளார். பரோல் நிபந்தனைகளை அவர் ஒருபோதும் மீறியது இல்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்றார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் துவேதி, ‘‘அரசியல் சாசனப் பிரிவு161-ன்படி கொலைக்குற்ற வழக்கில் முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது. தேசத்தந்தை மகாத்மாவை கொலை செய்த கோட்சேகூட 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார். பேரறிவாளன் கடந்த 32 ஆண்டுகளாக சிறையில் இருப்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்’’ என்றார்.

இதற்கு கடுமையாக ஆட்சேபம் தெரிவித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ், ‘‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் பின்னணியில் ஆயுதம், வெடிகுண்டு, வெளிநாட்டு தொடர்புஎன மிகப்பெரிய சதித்திட்டங்கள் உள்ளன.

ஏற்கெனவே பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு விட்டது. மீண்டும் ஜாமீன் வழங்கி கரிசனம் காட்ட முடியாது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு சிறை விதிகளுக்கு உட்பட்டு பரோல் வேண்டுமானால் வழங்கலாமே தவிர, நிச்சயமாக ஜாமீன் வழங்க முடியாது. தமிழக அரசின் தீர்மானம் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கும், மத்திய அரசுக்கும் மட்டுமே உள்ளது. இதில் தமிழக அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிதான் பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை பிறகு பார்ப்போம். தற்போது ஜாமீன் விவகாரத்துக்கு வருவோம்.

இந்த விவகாரம் நீண்ட நெடும் நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த விஷயத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்க அதிகாரம் உள்ளதா, அவரின் அதிகாரம் என்ன என்பது குறித்து தீர ஆராய வேண்டியுள்ளது. 32 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்த நபர், தனக்கு ஜாமீன் வழங்க கோருகிறார்.

எனவே, இதுதொடர்பாக மத்திய அரசு முடிவு எடுக்கும்வரை உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள வானளாவிய அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனுக்கு ஜாமீன் அளிக்கிறோம். அவர் மாதம் ஒருமுறை ஜோலார்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கிறோம். இந்த வழக்கின் முடிவுகள் பிரதான வழக்கின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டவை.

இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.

பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், மனிதநேய மக்கள்கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, நாம் தமிழர் கட்சிதலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.