திருவனந்தபுரம்: கேரளாவில் பலூன் விற்பனை செய்த பெண் ஃபேஷன் மாடலாக மாறியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் கண்ணூரில் உள்ள அண்டிலுர் காவி என்ற கோவிலில் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் வருகை தந்தனர். இந்த திருவிழாவுக்கு சென்ற புகைப்பட கலைஞர் அர்ஜுன் கிருஷ்ணன் என்பவர் பெண் ஒருவர் பலூன் விற்றுக் கொண்டிருந்ததை பார்த்தார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெண்ணின் முகம் புகைப்படத்திற்கு ஏற்ற முகம் என கருதிய அவர், விதவிதமாக புகைப்படம் எடுத்தார். புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய அந்த பதிவிற்கு நல்ல லைக்குகள் வந்துள்ளது. ஏராளமானோர் அந்த புகைப்படத்தையும், கிஷ்பூவையும் ரசித்தனர். இந்த புகைப்படத்திற்கு வந்த வரவேற்பை கண்டு மிரண்டு போன அர்ஜுன் கிருஷ்ணன், மீண்டும் கிஷ்பூவை தேடி சென்று அவரை மாடலிங்காக மாற்றி புகைப்படம் எடுக்க கோரினார். அதற்கு பெண்ணின் பெற்றோரும் ஒப்புக்கொண்ட நிலையில், ஒப்பனை கலைஞருடன் இணைந்து அந்த பெண்ணிற்கு கேரள ஸ்டைல், வெஸ்டர் ஸ்டைல் என விதவிதமாக அலங்காரம் செய்து புகைப்படங்களை எடுத்தார். இந்த புகைப்படங்களை இணையதளத்தில் அவர் பதிவேற்றம் செய்ததும் யாரும் எதிர்பாராத அளவிற்கு வரவேற்பு கிடைத்தது. புகைப்பட கலைஞர் அர்ஜுன் கிருஷ்ணனுக்கும் பல வாய்ப்புகள் வந்து குவிய துவங்கின. கிஷ்பூவும் பல நிறுவனங்களுக்கு மாடலிங்கிற்காக ஒப்பந்தமாகிவிட்டார். ஒரு புகைப்படம் ஒருவரின் வாழ்க்கையையே மாற்றிப்போட்டுவிட்டது. 10 ரூபாய்க்கு பலூன் விற்ற பெண் அதிக சம்பளம் வாங்கும் மாடல் அழகியாக மாறிவிட்டார்.