எல்லோரும் நிம்மதியாக வடநாட்டிலும் தென்னாட்டிலும் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு பெண்ணின் மரணம் இரு ஊர்களுக்கும் இருக்கும் சுமூக உறவை அசைத்துப் பார்த்துவிடுகிறது. தொடர் தற்கொலைகள், விபத்துகள், காணாமல் போனவர்கள் எனப் பாதிக்கப்பட்ட பெண்களின் லிஸ்ட் நீண்டுக்கொண்டே போக, ஊரின் நல்லது கெட்டதில் கலந்துகொள்ளும் வக்கில் கண்ணபிரான் இதற்கான காரணத்தை கண்டறிகிறார். இவற்றைச் செய்யும் கும்பலைத் தடுத்தி நிறுத்த அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் இந்த ‘எதற்கும் துணிந்தவன்’.
கண்ணபிரானாக சூர்யா. கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு பெரிய திரையில் சூர்யா படம். ‘சூரரைப் போற்று’, ‘ஜெய் பீம்’ போன்றவற்றில் கிளாஸ் என்றால் இதில் மாஸ் அவதாரம். காமெடி, எமோஷன், ரௌத்திரம் என எல்லாமே சரியான மீட்டரில் எகிறியிருக்கின்றன. கண்ணபிரானின் காதலி ஆதினியாக பிரியங்கா மோகன். பாடல்கள், காமெடி தவிர இரண்டாம் பாதியில் எமோஷனாலாகவும் ஸ்கோப் இருக்கும் பாத்திரம். மிகவும் சென்ஸிட்டாவான விஷயங்கள் குறித்துப் பேச வேண்டிய காட்சியில் பிரியங்காவின் நடிப்பு, சிறப்பு!
காமெடி ஃபேமிலி பட்டாளத்தில் இந்த முறை சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, தேவதர்ஷினி, சூரி மற்றும் புகழ். கமர்ஷியல் சினிமாவுக்கான காமெடி எனச் சில இடங்களில் இவை க்ளிக்காகி இருக்கின்றன. வில்லன் இன்பாவாக வினய். ஹீரோவோ வில்லனோ பெர்பாமன்ஸ் என்றாலே ஒரே முகபாவனையை வெளிப்படுத்துவதில் வினய் இன்னும் மாறவில்லை. ‘டாக்டர்’ ஹேங்க்ஓவர் கூட அப்படியே நீள்கிறது. குட்டி வில்லன்கள் தரும் எக்ஸ்பிரசன்கள்கூட வினய்யிடம் இருந்து வராதது ஏமாற்றம்.
கமர்ஷியல் படத்துக்கான பின்னணி இசையை பக்காவாகக் கொடுத்திருக்கிறார் இமான். பேருந்தின் ஹாரனை நினைவூட்டும் ‘சும்மா சுர்ருன்னு’ செம்ம கலர்ஃபுல் குத்துப் பாடலாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்டன்ட் காட்சிகளில் தெலுங்கு சினிமா வாடை என யோசிக்கும்போதே ராம் – லட்சுமண் பெயர் நினைவுக்கு வருகிறது. ராம் லட்சுமணன், அன்பறிவ் என நான்கு ஸ்டன்ட் மாஸ்டர்கள் என்றால் அடி வாங்கியவர்கள் நூறு பேராவது இருக்கும் என்றே தோன்றுகிறது.
சமகாலத்தில் நடந்த சில நிஜ சம்பவங்களைக் கொண்டு, இந்தக் கதையை எழுதியிருக்கிறார் பாண்டிராஜ். பெண் உடல் சார்ந்த வசனங்கள் படத்தைக் கடந்தும் பெரிய அளவில் பேசப்பட வேண்டும், பேசப்படும். “ஆண் பிள்ளைகளை அழக்கூடாது எனச் சொல்லி வளர்ப்பதைவிட, பெண்களை அழ வைக்கக்கூடாது என சொல்லி வளர்க்க வேண்டும்”, “ஒரு வீடியோ வெளியானால் அதற்காக வெட்கப்படவேண்டியது அந்த வீடியோவில் இருப்பவர்கள் அல்ல, அதை எடுத்தவர்கள்” போன்ற வசனங்கள் அருமை. கமர்ஷியல் ஆங்கிளுக்காக “கோட்டு போட்டாதான் ஜட்ஜ், வேட்டி கட்டினா நானே ஜட்ஜ்” போன்ற வசனங்களை சூர்யா பேசும்போதெல்லாம் நீதிக்காகப் போராடிய ‘ஜெய் பீம்’ பட சந்துரு கதாபாத்திரம் என்ன நினைத்திருக்கும் என்று எண்ண தோன்றுகிறது.
படம் ஒரு பக்கம் சீரியஸாக சென்று கொண்டிருக்க, இன்னொரு பக்கம், அதைக் கீழ் இறக்கும் விதமாக பின் பாதியில் வரும் பாடல் மைனஸ். அதேபோல், அவ்வளவு சீரியஸான பிரச்னையைக் கையில் வைத்துக்கொண்டு, நேரமே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்போதுகூட காமெடி, ரொமான்ஸ், கல்யாண விருந்து என்று அட்ராசிட்டி செய்திருக்கிறார்கள். கமெர்ஷியல் சினிமாதான், அதுக்குன்னு இப்படியாங்க?! சில குடும்பக் காமெடிகளும் அதே ரகத்தில்தான் இருக்கின்றன.
அதே போல் அவ்வளவு பில்ட் அப் ஏற்றி அறிமுகம் செய்யப்படும் விஜி சந்திரசேகர், ‘அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்’ ரீதியில் வழக்கை அணுகுவது காமெடியாக இருக்கிறது. சித்தாந்த ரீதியாக படத்தின் க்ளைமேக்ஸ் உதைத்தாலும், ‘பொயட்டிக் ஜஸ்டிஸ்’ என்பதுபோல கமெர்ஷியல் சினிமாவுக்கான இலக்கணத்தையும் கணக்கில்கொண்டு அதைக் கடந்து போக வேண்டியதாயிருக்கிறது.
ஒரு பக்கா கமர்ஷியல் சினிமாவில் சமூக கருத்தை நுழைத்து அதை சுவாரஸ்யமாகக் கொடுப்பது என்பது பெரும் சவால். அதைச் சிறப்பாகவே செய்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். அந்த வகையில், ‘எதற்கும் துணிந்தவன்’ சூர்யாவுக்கும், பாண்டிராஜுக்கும் ஹாட்ரிக்!