இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மார்ச் 09ஆந் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.
தூதுவர் சுங்கை அன்புடன் வரவேற்ற அமைச்சர் பீரிஸ், இலங்கையிலான அவரது பதவிக் காலத்தின் போது தூதுவருடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்தார். அமெரிக்காவை ஒரு முக்கிய பங்காளியாக இலங்கை கருதுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் உயர்த்துவதற்கு இலங்கை அரசாங்கம் பைடன் நிர்வாகத்துடன் நெருக்கமாகச் செயற்படுவதற்குத் தயாராக இருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார்.
நாட்டின் சௌபாக்கியத்திற்கு பங்களிக்கும் வகையில், இலங்கையுடன் வலுவான அரசியல் மற்றும் பொருளாதார பங்காளித்துவத்தை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக தூதுவர் சுங் உறுதியளித்தார். இலங்கையுடனான உறவுகளை ஆழப்படுத்தவும், பரஸ்பர நன்மைகளை வழங்குவதற்காக ஆக்கபூர்வமான மற்றும் வளமான பங்காளியாக விளங்குவதற்கும் அமெரிக்கா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பரந்த அளவிலான கலந்துரையாடல்களில் ஈடுபட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் மற்றும் தூதுவர் சுங், முக்கியமான உலகளாவிய சமகாலப் பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் பீரிஸ் அமெரிக்கத் தூதுவருக்கு விளக்கமளித்தார். இந்த மாத இறுதியில் இலங்கை – அமெரிக்கக் கூட்டாண்மை உரையாடலின் 4வது அமர்வைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகளை இரு தரப்பினரும் வரவேற்றனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 மார்ச் 10