சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளில் அதிரடி மாற்றம்: தெண்டுல்கர் வரவேற்பு..!

லண்டன், 
சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு விதிமுறைகளை வகுப்பது மற்றும் விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது போன்ற பணிகளை லண்டனில் செயல்படும் மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) கவனிக்கிறது. இந்த கிளப் உருவாக்கும் விதிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்புதல் வழங்கி அமல்படுத்துகிறது. 

இந்த நிலையில் தற்போதைய கிரிக்கெட் விதிமுறைகளில் சில திருத்தங்களை எம்.சி.சி. கொண்டு வந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேன், பந்து வீசுவதற்கு முன்பே கிரீசை விட்டு வெளியேறும் போது பவுலர் ரன்-அவுட் செய்தால் சர்ச்சைகள் கிளம்புவது உண்டு. ‘மன்கட்’ என்று அழைக்கப்படும் இந்த ரன்-அவுட் விதிமுறைப்படி சரி என்றாலும், இது உண்மையான விளையாட்டின் உத்வேகத்துக்கு எதிரானது என்று கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ஜோஸ் பட்லரை இவ்வாறு ரன்-அவுட் செய்தது பரபரப்பாக பேசப்பட்டது நினைவிருக்கலாம். 
இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அதில் முக்கிய திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இதன்படி, இவ்வாறு ரன்-அவுட் செய்வது முன்பு நேர்மையற்ற ஆட்டம் என்ற பிரிவில் விதிமுறை 41-ல் இடம் பெற்றிருந்தது. அது தற்போது ரன்-அவுட் என்ற விதிமுறை 38-க்கு மாற்றப்பட்டு உள்ளது. இதன் மூலம் இத்தகைய முறையில் அவுட் செய்யும் போது அதிகாரபூர்வமாக ரன்-அவுட்டாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே இனி யாரும் இதனை நியாயமற்ற செயல், கிரிக்கெட் தார்மீகத்துக்கு முரணானது என்று வரிந்து கட்ட முடியாது.
* கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பவுலர்கள் பந்தை எச்சிலால் தேய்த்து பளபளப்பாக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. எச்சிலால் தேய்த்து பளபளப்பாக்கும் போது பந்து நன்கு ஸ்விங் ஆகும் என்பது பவுலர்கள் தரப்பு வாதம். இது குறித்து ஆய்வு செய்ததில், அப்படி ஒன்றும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வியர்வையால் பந்தை தேய்த்து வீசுவது அதற்கு நிகரானது தான் என்று கூறியுள்ள எம்.சி.சி. இனி பந்தில் எச்சிலை தடவுவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
* முன்பெல்லாம் பேட்ஸ்மேன் கேட்ச் ஆகும் போது, அதற்குள் எதிர்முனையில் நிற்கும் வீரர் பேட்டிங் முனைக்கு ஓடி விட்டால் அவர் தான் அடுத்த பந்தை எதிர்கொள்வார். இனி அப்படி நடக்க வாய்ப்பில்லை. பேட்ஸ்மேன் கேட்ச் ஆகும் போது, புதிதாக களம் இறங்கும் வீரர் தான் அடுத்த பந்தை சந்திக்க வேண்டும். ஓவரில் கடைசி பந்தில் கேட்ச் ஆனால் இந்த விதிமுறை பொருந்தாது.
* சில சமயம் பேட்ஸ்மேன்கள், பவுலர்களை குழப்புவதற்காக அவர்கள் பந்து வீச ஓடி வரும் போது, ஸ்டம்பை விட்டு சற்று தூரம் விலகி நின்று பேட் செய்வது உண்டு. இதனால் பவுலர்கள் தடுமாறி வைடு வீசும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க, களத்தில் பேட்ஸ்மேன் எந்த இடத்தில் நின்று பந்தை எதிர்கொள்கிறாரோ அதில் இருந்து தான் வைடு கணக்கிடப்படும். இது பவுலர்களுக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
* பந்து வீசும் போது பீல்டர்கள் நியாயமற்ற முறையில் நகர்ந்தால் முன்பு அந்த பந்து ‘டெட் பால்’ என்று அறிவிக்கப்பட்டது. இந்த விஷயத்திலும் மாற்றம் வருகிறது. பீல்டர் நியாயமற்ற முறையில் வேண்டுமென்றே இவ்வாறு நகர்வது உறுதியானால் ‘டெட் பால்’ என்று அறிவிக்கப்படுவதோடு பேட்டிங் அணிக்கு 5 ரன் போனசாக வழங்கப்படும்.
மேற்கண்ட புதிய விதிமுறைகள் அக்டோபர் மாதத்திற்கு பிறகு அமலுக்கு வர உள்ளன.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளில் அதிரடி மாற்றத்திற்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மன்கட் முறையில் ரன்-அவுட் என்று அழைக்கப்படுவதை நான் எப்போதும் அசவுகரியமாகவே உணர்ந்தேன். இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை பொறுத்தவரை அது எப்போதுமே ரன்-அவுட் தான். எனவே இது எல்லோருக்கும் நல்ல செய்தி’ என்று தெரிவித்தார்.
இதே போல் ஒரு பேட்ஸ்மேன் ‘கேட்ச்’ ஆகும் போது, அடுத்து இறங்கும் வீரர் தான் பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்பதும் நியாயமான விதி முறையாகும். ஏனெனில் ஒரு பவுலர் அடுத்தடுத்து விக்கெட்டை வீழ்த்துவதற்கு நியாயமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், புதிய பேட்ஸ்மேனுக்கு பந்துவீசுவதே சரியானது’ என்றும் தெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.