உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்குவதில் பிரச்சினை – கமலா ஹாரிஸ் போலாந்து விரைவு

வார்சா,
உக்ரைன் மீது ரஷியா இன்று 15-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. 
இதற்கிடையில், ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி செய்து வருகின்றன. அந்த வகையில், உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பு நாடுகள் வழங்கும் போர் விமானங்களுக்கு அதே அம்சங்களை கொண்ட புதிய போர் விமானத்தை அமெரிக்கா வழங்க முன்வந்தது.

இதனை தொடர்ந்து, உக்ரைனுக்கு தங்களிடம் உள்ள அனைத்து மிக்-29 ரக போர் விமானங்களையும் வழங்க போலாந்து முன்வந்தது. அதன்படி, தங்களிடம் உள்ள ரஷியா நாட்டு தயாரிப்பான 27 மிக்-29 ரக போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்க போலாந்து முன்வந்தது. 
ஜெர்மனியில் உள்ள நேட்டோ, அமெரிக்க படைத்தளத்திற்கு தனது மிக்-29 ரக போர் விமானங்களை வழங்க போலாந்து திட்டமிட்டிருந்தது. அங்கிருந்து உக்ரைன் விமானப்படைக்கு அந்த விமானங்கள் அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், உக்ரைனுக்கு மிக்-29 ரக போர் விமானங்களை வழங்க போலாந்து விடுத்த அழைப்பை அமெரிக்கா நிராகரித்துள்ளது. ரஷியாவின் தயாரிப்பான மிக்-29 ரக போர் விமானங்கள் நேட்டோ படைத்தில் இருந்து ரஷியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் பட்சத்தில் அது போரை ஐரோப்பிய நாடுகளுக்கு விரிவுபடுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. 
மேலும், ரஷியாவின் போர் விமானங்களுக்கு பதில் புதிய போர் விமானங்களை போலாந்துக்கு கொடுக்கும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்படும். 
ஆகையால், போலாந்தின் அழைப்பை அமெரிக்கா மற்றும் நேட்டோ நிராகரித்துவிட்டது. இதனால், நேட்டோ உறுப்பு நாடான போலாந்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் சிறு விரிசல் ஏற்படத்தொடங்கியுள்ளது.  
இந்நிலையில், போர் விமானங்கள் தொடர்பான சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இன்று போலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது உக்ரைனில் இருந்து அகதிகளாக வரும் மக்களுக்கு போலாந்து அடைக்கலம் கொடுத்து வருவதற்கு அமெரிக்கா பாராட்டு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
மேலும், உக்ரைனின் ரஷியா நடத்தி வரும் படையெடுப்பு எல்லையில் அமைந்துள்ள போலாந்திற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இதனால், போலாந்துக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்ற உறுதியை வெளிப்படுத்தும் வகையில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசின் இந்த வருகை அமைந்துள்ளதாக கருத்தப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.