கதிர்வீச்சு அபாயத்திற்கு மத்தியில் செர்னோபில் மின்பாதையை சரிசெய்வதற்காக உக்ரைன் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக, செர்னோபில் அணுமின் நிலையம் புதன்கிழமை முற்றிலுமாக மூடப்பட்டது. அப்பகுதியில் ஏற்பட்டுள்ள மின் தடை காரணமா நிலையத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும், இது அணுசக்தி பொருட்களை குளிர்விப்பதற்கான அமைப்புகளை பாதிக்கலாம் என்றும் உக்ரைன் கூறியுள்ளது. மின் தடைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் புதிய கவலைகளை எழுப்புகிறது.
உலகின் மிக மோசமான அணுசக்தி பேரழிவின் தளமான செர்னோபில் ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், உடனடியாக பதில் தாக்குதல் நடத்தி உக்ரேனிய துருப்புக்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. ஆனால், அது மீண்டும் ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
செர்னோபில் அணுமின் நிலையத்தின் முக்கிய அறிவிப்புகள்:
தற்போதைய நிலவரப்படி, அவசரகால ஜெனரேட்டர்கள் அணுமின் நிலையத்திற்கு தேவையான மின்சாரம் வழங்குகின்றன.
இந்நிலையில், உக்ரேனிய வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதமூலம் அரசாங்கம் செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு தேவையான மின் பாதையை சரிசெய்ய முடியும் என்று கூறினார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “Chernobyl NPP-யை இயக்கும் டீசல் ஜெனரேட்டருக்கு 48 மணிநேர திறன் உள்ளது. அதன் பிறகு, செலவழிக்கப்பட்ட அணு எரிபொருளுக்கான சேமிப்பு வசதியின் குளிரூட்டும் அமைப்பு தானாகஅணைந்துவிடும், இதனால் உடனடியாக கதிர்வீச்சு கசிவு தொடங்கும்” என்றார்.
மின்சாரம் வரும் வரை டீசல் ஜெனரேட்டர் 48 மணி நேரம் எரிபொருளை வைத்திருப்பதாகவும், அதன்பிறகு அணு மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்பு அளவுருக்களை கட்டுப்படுத்த முடியாது என்றும் உக்ரேனிய கிரிட் ஆபரேட்டர் உக்ரெனெர்கோ கூறினார்.
செர்னோபில் சுமார் 20,000 செலவழித்த எரிபொருள் அசெம்பிளிகளைக் கொண்டிருந்தது, அவை மின்வெட்டுக்கு மத்தியில் குளிர்ச்சியாக இருக்க முடியாது என்று உக்ரைனின் அரசு நடத்தும் அணுசக்தி நிறுவனமான Energoatom கூறியுள்ளது.
வெப்பமயமாதல் காரணமாக, கதிரியக்க பொருட்கள் சுற்றுச்சூழலில் வெளியிடப்படலாம் என்று Energoatom விளக்குகிறது. மேலும் “கதிரியக்க மேகங்கள் உக்ரைன், பெலாரஸ், ரஷ்யா மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கு காற்றில் பயணிக்க முடியும்” என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செர்னோபிலில் உள்ள கதிரியக்க கழிவு நிலையங்களில் உள்ள அணுசக்தி பொருட்கள் கண்காணிப்பு அமைப்புகள் தரவுகளை அனுப்புவதை நிறுத்திவிட்டதாக ஐ.நா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு செவ்வாயன்று எச்சரித்துள்ளது.