மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறுவர்களுக்கு வளமான எதிர்காலத்தினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் துறைசார் திணைக்கள அதிகாரிகளுடனான விசேட செயலமர்வு இன்று (10) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் கருத்து தெரிவிக்கையில், அனாதைகள், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கான சேவையினை ஆற்றிவருகின்ற சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம் திருகோணமலையில் தலைமைக் காரியாலத்தினையும், கிழக்கு மாகாணத்திலுள்ள 3 மாவட்டங்களிலும் 13 உப காரியாலயங்களைக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.
இதனூடாக கிழக்கு மாகாணத்தில் 1,272 சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவற்றில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான 875 சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இம் மாகாணத்தில் காணப்படும் 53 சிறுவர் அபிவிருத்தி இல்லங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 31 இல்லங்கள் காணப்படுகின்றன.
இவற்றில் துஷ்பிரயோகம், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான சிறுவர்கள் அதிகம் காணப்படுகின்றனர். மேலும் குற்றமிழைத்த பிள்ளைகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.