இன்றைக்கு பேசப்படுகிற ‘பேன் இந்தியா’ கான்செப்ட்டின் முன்னோடி இயக்குநர் ராஜமௌலி. அவரது இயக்கத்தில் ஜூனியர் என்.டி,ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், அலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள RRR படம், வரலாற்றுப் பின்னணி கொண்டது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலனாது. இதற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு இருந்த போதும் லாக்டௌன் உள்ளிட்ட காரணங்களால் படத்தின் வெளியீடு பலமுறை தள்ளிப் போனது. இறுதியாக மார்ச் 25 திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் வெளிவருகிறது. படம் வெளியாகும் நாள்கள் தள்ளிப் போனதால் படத்தயாரிப்பாளர்களுக்கு ஏற்கனவே அதிகரித்து கொண்டிருக்கும் வட்டியால் 60 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
என்.டி,ஆர் மற்றும் ராம்சரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிப்பதற்காக இவர்களுக்கு 45 கோடி சம்பளமாகத் தரப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. கேமியோ ரோலில் நடித்த அஜய் தேவ்கனுக்கு 25 கோடி சம்பளமாகத் தரப்பட்டிருக்கிறது. பாலிவுட் நடிகை அலியா பட், ராம் சரணுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அவருக்கு சம்பளமாக 9 கோடி ரூபாய் தரப்பட்டதாகவும் படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு லாபத்தில் பெரிய பங்கு செல்லவிருப்பதாகவும் தெரிகிறது. படம் வெளியாவதற்கு முன்பே 300 கோடி ரூபாய் அளவுக்கான லாபம் ஈட்டப்பட்டிருப்பதாக சினிமா வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் வெளியாக இருக்கிற இந்தப் படம் முதலில் திரையரங்குகளிலும் பின்னர் OTTயிலும் வெளியாகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் OTT உரிமை ZEE5 தளத்திலும் ஹிந்தி, வெளிநாட்டு மொழிகளில் உரிமை NETFLIX தளத்திற்கும் தரப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய ஓப்பனிங் உடன் படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.