‘‘நான் தீவிரவாதியா? உண்மையான தேசபக்தன்; எங்கள் புரட்சி நாடுமுழுவதும் பரவும்’’- அரவிந்த் கேஜ்ரிவால் நெகிழ்ச்சி

புதுடெல்லி: கேஜ்ரிவால் ஒரு தீவிரவாதி அல்ல, நாட்டின் மகன், உண்மையான தேசபக்தர் என்பதை பஞ்சாப் மக்கள் உறுதி செய்துள்ளனர் என டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் சூழல் உள்ளது. ஆளும் காங்கிரஸ் 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு அற்புதமான வெற்றியை மக்கள் தந்துள்ளனர். இதன் மூலம் கேஜ்ரிவால் ஒரு தீவிரவாதி அல்ல, நாட்டின் மகன், உண்மையான தேசபக்தர் என்பதை மக்கள் உறுதி செய்துள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சி ஒரு கட்சி என்பதை விட மேலானது. இது ஒரு புரட்சி. இது மாற்றத்திற்கான நேரம், இன்குலாப் (புரட்சி). ஆம் ஆத்மி கட்சியில் சேருமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். ஆம் ஆத்மி ஒரு கட்சி மட்டுமல்ல. இது ஒரு புரட்சியின் பெயர்.

முதலில் டெல்லியில் ஒரு புரட்சி, தற்போது பஞ்சாபில் புரட்சி. இனி இந்த புரட்சி நாடு முழுவதும் பரவும். பஞ்சாப் மக்கள் அதிசயங்களைச் செய்துள்ளனர்.

ஆம் ஆத்மியின் சாமானியர்கள் சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத் சித்து, அம்ரீந்தர் சிங், பிக்ரம் மஜிதியா ஆகியோரை தோற்கடித்துள்ளனர்.
ஆனால் இவ்வளவு பெரிய பெரும்பான்மையை கண்டு நாங்களும் பயப்படுகிறோம். நாங்கள் இந்த வெற்றியை கண்டு கர்வம் கொள்ளவில்லை.

அமைப்பில் மாற்றம் இல்லாமல் எதையும் மாற்ற முடியாது என்று சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் கூறினார். அதுவே எங்கள் எண்ணம்.

கடந்த 75 ஆண்டுகளில், இந்த கட்சிகள் பிரிட்டிஷ் முறையை உயிர்ப்புடன் வைத்திருந்தது வருத்தமளிக்கிறது. நாட்டு மக்களை ஏழைகளாக வைத்துள்ளன. ஆம் ஆத்மி இந்த பழைய முறையை டெல்லியில் மாற்றியது. நாங்கள் நேர்மையான அரசியலைத் தொடங்கினோம். மக்கள் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள்.

நாட்டை முன்னேற விடாமல் தடுக்கும் பெரும் சக்திகள் உள்ளன. பஞ்சாபில் சதிகள் நடந்தன. அனைவரும் ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக தாக்கினர். கடைசியாக அனைவரும் கேஜ்ரிவாலை தீவிரவாதி என்று பிரச்சாரம் செய்தனர்.

பஞ்சாப் வெற்றியின் மூலம் மக்கள் தங்கள் கருத்தை தெரிவித்து விட்டனர். கேஜ்ரிவால் தீவிரவாதி அல்ல, நாட்டைக் கொள்ளையடிப்பவர்கள் தான் தீவிரவாதிகள் என்பது தான் மக்களின் கருத்து.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.