திருப்பத்தூர்: ”விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டுள்ள என் மகன், தற்போது பொருளாதார வசதி இல்லாததால் வரும் காலங்களில் கண்டிப்பாக விவசாயத்தில் ஈடுபடுவார்’’ என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் பேரறிவாளன் (52). முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு, சிறுநீரக தொற்று, மூட்டு வலிக்கு மருத்துவ சிகிச்சை பெற இருந்ததால் கடந்த ஆண்டு மே 28-ம் தேதி ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து, ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு பேரறிவாளன் அழைத்து வரப்பட்டார்.
சிறைத்துறை உத்தரவுபடி தினமும் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் அவர் கையெழுத்திட்டு வந்தார். வீட்டில் இருந்தபடியே சிறுநீரக தொற்றுக்கான சிகிச்சையை அவர் எடுத்து வந்தார். மருத்துவர்களின் ஆலோசனை பேரில் அவ்வப்போது சென்னை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சையில் இருப்பதால் பேரறிவாளனுக்கு ஒவ்வொரு மாதம் இதுவரை 9 முறை அவருக்கு பரோல் நீடிக்கப்பட்டது.
இந்நிலையில், பரோலில் வந்த பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. இது குறித்து பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் பத்திரிகையாளரிடம் இன்று கூறியது: ‘‘என் மகனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது, 30 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். மேலும், சிறுநீரக தொற்றால் அவதிப்பட்டு வந்த என் மகன் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு பரோல் நீடிப்பும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. தொடர்ந்து பரோல் நீட்டிக்கப்பட்டதால் எங்கள் அரவணைப்பில் இருந்த என் மகனுக்கு தற்போது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஒரு மனிதரோட வாழ்க்கையில் 30 ஆண்டுகள் என்பது எவ்வளவு பெரிய காலம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து என் மகன் சுதந்திரமாக நடமாடுவார் என்பதில் எங்கள் குடும்பத்தாருக்கு மகிழ்ச்சியளிக்கிறது. என் மகனுக்காக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள், அவரது படிப்பு, நன்னடத்தை, இத்தனை ஆண்டுகாலம் சிறை தண்டனை, உடல்நிலை இதையெல்லாம் காரணம் காட்டி ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டிருந்தனர்.
ஏற்கெனவே நான் பலமுறை சொல்லி இருந்தேன், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்கும், என் மகனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று. ஆனால் அதை யாரும் நம்பவில்லை. என் மகன் சட்டப்படி போராடினார். அடுத்தது, அவரது விடுதலையை நாங்கள் விரைவில் எதிர்பார்க்கிறோம்.
என் மகனின் விடுதலைக்காக அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் குரல் கொடுக்கின்றனர். ஜாமீன் கிடைக்க மிகவும் உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும், வழக்கறிஞர்களுக்கும், ஊடகத்துறையினருக்கும் என நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
என் மகனுக்கு விரைவில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறோம். மேலும், விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டுள்ள என் மகன், தற்போது பொருளாதார வசதி இல்லாததால் வரும் காலங்களில் கண்டிப்பாக விவசாயத்தில் ஈடுபடுவார்’’ என்று அவர் கூறினார்.
இதைதொடர்ந்து, பேரறிவாளன் வழக்கறிஞர் சிவக்குமார் கூறும்போது, ‘‘கடந்த 32 ஆண்டுகளாக பேரறிவாளன் தான் ஒரு நிரபராதி என போராடி வந்தார். அதற்கான ஆதாரங்களுடன் அவர் நீதிமன்றத்தை நாடினார். அதன்படி தற்போது பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இது அவரது தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம். விரைவில் விடுதலை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.