வாணியம்பாடி: ’ஒவ்வொரு மாதமும் பரோல் நீட்டிப்பு கொடுத்து, பேரறிவாளனின் உடல்நிலை சீராக பெரிய அளவில் ஒத்துழைப்பு அளித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியது: “என் மகனுக்கு உடல்நிலை பரவாயில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் என்றால், இந்த பரோல் நீட்டிப்பு ஒரு காரணம். தமிழக அரசு பரோல் நீட்டிப்பு வழங்கியதால், பேரறிவாளனின் உடல்நிலையை என்னால் நல்லபடியாக கவனித்துக் கொள்ள முடிந்தது. இல்லையெனில் அவரது உடல்நிலை சீர்கெட்டு போயிருக்கும்.
பரோல் நீட்டிப்புக் கொடுத்து இது பத்தாவது மாதம். ஒவ்வொரு மாதமும் பரோல் நீட்டிப்பு கொடுத்து, பேரறிவாளனின் உடல்நிலை சீராக பெரிய அளவில் ஒத்துழைப்பு அளித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தது எனது மகனுக்கு திருமண ஏற்பாடுதான். இதற்குமுன் பரோலில் வந்தபோதே நான் கூறியிருந்தேன்” என்று அவர் கூறினார்.