மரியுபோல்: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 16வது நாளை எட்டியுள்ளது. துறைமுக நகரான மரியுபோலில் ரஷ்யப் படைகள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை குண்டு வீசுவதால் அங்குள்ள 4 லட்சம் மக்களும் கடந்த இரண்டு நாட்களாக நரகத்தில் சிக்கியுள்ளதுபோல் தத்தளிக்கிறார்கள் என அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
மரியுபோலை கிட்டத்தட்ட தனது முழுமையானக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது ரஷ்ய படைகள். சுமி நகரிலிருந்து 12,000 பேர் வெளியேற்றப்பட்டனர். ஆனால், மரியுபோலில் இருந்து யாரும் வெளியேற ரஷ்ய படைகள் அனுமதிக்கப்படவில்லை.
கீவிலிருந்து 20 லட்சம் பேர் வெளியேறினர்.. உக்ரைனின் கார்சன், ஒடேசா, செர்னிஹிவ், செனோபில், மரியுபோல், சுமி எனப் பல நகரங்களை தன்வசப்படுத்தியுள்ள ரஷ்ய படைகள் தற்போது தலைநகர் கீவை குறிவைத்து முன்னேறி வருகிறது. கீவின் வடகிழக்குப் பகுதியிலிருந்து தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் கீவ் நகரிலிருந்து 20 லட்சம் மக்கள் வெளியேறியதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். கீவ் நகரிலிருந்து 2ல் ஒருவர் வெளியேறிவிட்டனர் என அவர் தெரிவித்தார். உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 40 லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு உதவ வேண்டும்: சீனா.. ரஷ்யா உக்ரைன் இடையேயான சூழல் குழப்பமானதாக மாறியுள்ளதால் அந்நாடுகள் பேச்சுவார்த்தையை சுமுகமாக நடத்த மத்தியஸ்தம் தேவை என சீனப் பிரதமர் லீ கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது சீனா தடை விதிக்குமா? ரஷ்யாவின் செயல்களுக்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்குமா போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.
உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.. உக்ரைன் உயிரி ஆயுதங்களை தயாரிக்கிறது என ரஷ்யாவும், ரஷ்யா தான் தயாரிக்கிறது என அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் சொல்லிவரும் நிலையில் உக்ரைனில் உள்ள சோதனைக் கூடங்களில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கும் நோய்க்கிருமிகளை அழித்துவிடுமாறு உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
30 நிமிடங்களுக்கு ஒரு முறை தாக்குதல்: 4 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட மரியுபோல் துறைமுக நகரத்தில் ரஷயப் படைகள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை குண்டு வீசுவதால் அங்குள்ள 4 லட்சம் மக்களும் கடந்த இரண்டு நாட்களாக நரகத்தில் சிக்கியுள்ளதுபோல் தத்தளிக்கிறார்கள் என அந்நகர மேயர் வாடிம் பாய்சென்கோ தெரிவித்துள்ளார். மேயரின் ஆலோசகர் பெட்ரோ ஆண்ட்ருஷென்கோ கூறுகையில் ரஷ்யா எங்கள் மக்களை அழிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டது. அதனாலேயே மீட்புப் பணிகளை முடக்குகிறது என்று வேதனை தெரிவித்தார்.
இந்நிலையில் ரஷ்ய நேரப்படி மார்ச் 11 ஆம் தேதி காலை 10 மணி முதல் கீவ், சுமி, கார்கிவ், மரியுபோல், செர்னிஹிவ் ஆகிய 5 நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற மனிதாபிமான வழித்தடம் அனுமதிக்கப்படும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.