திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம் திட்டை பகுதியில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் தங்கி இருந்த மாணவிகள் 2 பேரை கடந்த 5-ந் தேதி முதல் காணவில்லை.
இதுபற்றி அறிந்ததும் பள்ளி நிர்வாகத்தினர் பத்தினம்திட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவிகளை தேடினர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில் 2 மாணவிகளையும் சிலர் ஒரு காரில் ஏற்றி கடத்தி செல்வது பதிவாகி இருந்தது.
இதையடுத்து பத்தினம்திட்டை டி.எஸ்.பி. பைஜூ குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மாயமான மாணவிகளையும், அவர்களை கடத்தி சென்ற வாலிபர்களையும் தேடினர்.
இதில் மாணவிகள் இருவரையும் கடத்தி சென்றது பத்னாபுரத்தை சேர்ந்த அப்சல் முகமது மற்றும் அவரது நண்பர் ஆகாஷ் உதயன் என தெரியவந்தது. இருவரும் ஆன்லைன் உணவு வினியோக நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் கள். இருவரையும் கைது செய்த போலீசார் மாணவிகளையும் மீட்டனர்.
கைதான வாலிபர்களிடம் விசாரணை நடத்தியபோது இருவரும் மாணவிகளுடன் இன்ஸ்டாகிராமில் பழகியதாகவும், பின்னர் தனிமையில் சந்திக்க முடிவு செய்து வெளியூர் சென்றதாகவும் கூறினர்.
மாணவிகளை கடத்தி சென்ற வாலிபர்கள் இருவரும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.