கோவாவில் யாராலும் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய மனோகர் பாரிக்கர், கடந்த 2019-ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் சபாநாயகராக இருந்த பிரமோத் சாவந்த் முதல்வர் பதவிக்கு வந்தார். ஆயுர்வேத டாக்டரான பிரமோத் சாவந்த் தனது இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார்.
1973-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி பிறந்த பிரமோத் சாவந்த், 2017-ம் ஆண்டு கோவா சட்டமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ம் ஆண்டு மனோகர் பாரிக்கர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த போது புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடந்தது. உடனே அப்பதவியை பிடிக்க பிரமோத் சாவந்த் காய் நகர்த்தினார். சங்குலியம் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரமோத் சாவந்த் பாஜகவில் இளைஞரணித் தலைவராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன் பிறகு பாஜவில் தேசிய துணைத்தலைவர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். சங்குலியம் தொகுதி இருக்கும் பகுதி காங்கிரஸ் கோட்டையாக கருதப்படுகிறது.
அங்கு பாஜக வெற்றி பெறுவது என்பது சவாலான காரியமாகும். அதில் வெற்றி பெற்றுள்ள பிரமோத் சாவந்த் கொள்கை ரீதியாக பாஜகவோடு மிகவும் ஐக்கியமானவராக கருதப்பட்டார். எனவே தான் மனோகர் பாரிக்கர் உடல் நலம் சரியில்லாமல் இருந்த போது ஆர்.எஸ்.எஸ்.தலைவர்களை பிரமோத் சாவந்த் சந்தித்து தனக்கு முதல்வர் பதவியை கொடுக்கும்படி கேட்டபோது அதற்கு ஆர்.எஸ்.எஸ்.தலைவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
கிறிஸ்தவர்கள் அதிக அளவில் இருக்கும் கோவாவில் வலுவான, அதேசமயம் நீண்ட நாள் கட்சியை முன்னெடுத்து செல்லக்கூடிய தலைவர் வேண்டும் என்று கருதியே பிரமோத் சாவந்த்தை பாஜகவும் முதல்வர் பதவிக்கு ஏற்றுக்கொண்டது. கட்சியில் மூத்த தலைவர்களான லட்சுமிகாந்த், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் ஆகியோர் இருந்த நிலையிலும் பிரமோத் சாவந்த்திற்கு பாஜக முன்னுரிமை கொடுத்தது. மனோகர் பாரிக்கரும் பிரமோத் சாவந்த்தான் முதல்வராகவேண்டும் என்று விரும்பியதாக பாஜக நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர். அதோடு கடந்த மூன்று ஆண்டில் கோவாவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆட்சியை திறம்பட நடத்தியதில் பிரமோத் சாவந்த் முக்கிய பங்கு வகித்தார்.
ஆசிரியராக இருக்கும் தனது மனைவியை மாநில மகளிரணி தலைவராக நியமித்துக்கொண்ட பிரமோத் சாவந்த் தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளார். தொங்கு சட்டசபை அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜகவிற்கு கோவாவில் அறுதிப்பெரும்பான்மைக்கு நெருக்கமான் இடங்கள் கிடைத்திருப்பது அக்கட்சிக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. பாஜக-வில் கேட்ட தொகுதி கிடைக்காததால் விலகி தனித்து போட்டியிட்ட மனோகர் பாரிக்கர் மகனே தேர்தலில் தோற்றுப்போனார்.
தற்போது பிரமோத் சாவந்த் கோவாவில் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. முதல்வர் ரேஸில் வேறு சிலர் இருந்தாலும், பிரமோத் சாவந்த் முன்னிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கோவாவில் காங்கிரஸ் 13 தொகுதியிலும், திரிணாமுல் காங்கிரஸ் 5 தொகுதியிலும் வெற்றி பெற்று இருக்கிறது. பாஜகவிற்கு அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இம்முறை சிறிய கட்சிகள் 3 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. அவர்கள் பாஜக வுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.