ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. 403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் ஆளும் பா.ஜனதா தொடக்கத்தில் இருந்தே முன்னிலை பெற்றது. அந்த கட்சி தனியாக 255 இடங்களை பெற்றது. ஆட்சியமைக்க 202 இடங்கள் தேவை என்ற நிலையில், கூட்டணி கட்சிகள் உதவியின்றி தனிப்பெரும்பான்மையாக ஆட்சியமைக்க இருக்கிறது.
கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 273 இடங்களை பிடித்துள்ளது. பா.ஜனதாவுக்கு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி மட்டுமே ஈடுகொடுத்தது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 125 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் (2), பகுஜன் சமாஜ் (1), ஓவைசி கட்சிகள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வீசிய அலையில் காணாமல் போகின.
பஞ்சாப் மாநிலத்தை தவிர உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களை பா.ஜனதா கைப்பற்றுகிறது. இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவு 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில சிவ சேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறுகையில் ‘‘பா.ஜனதா சிறந்த வெற்றியை பெற்றுள்ளது. உத்தர பிரதேசம் அவர்களுடைய மாநிலம். அகிலேஷ் யாதவின் வெற்றி மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 42 இடங்களில் இருந்து 125 இடங்களாக அதிகரித்துள்ளது. மாயாவதி, ஓவைசி பா.ஜனதாவின் வெற்றிக்கு பங்களித்தனர். ஆகவே, அவர்களுக்கு பத்ம விபூஷன், பாரத் ரத்னா விருதுகள் வழங்க வேண்டும்’’ என விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்… கடுமையாக உழைத்தும் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை – அசாதுதீன் ஓவைசி ஆதங்கம்