உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தினர் தொடர்ந்து பதினாறாம் நாளாக இன்றும் பல்வேறு நகரங்களின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் பிப்ரவரி 24ஆம் நாள் முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அணுமின் நிலையங்கள், விமானத் தளங்கள் ஆகியவற்றையும், எல்லைப் பகுதி நகரங்களையும் ரஷ்ய ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். தலைநகர் கீவைக் கைப்பற்றும் முயற்சி இன்னும் வெற்றிபெறவில்லை. இந்நிலையில் பதினாறாம் நாளாக இன்றும் லுட்ஸ்க், தினிப்ரோ, ரைவ்ன், வாலின் உள்ளிட்ட நகரங்களில் ரஷ்ய ராணுவத்தினர் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
லுட்ஸ்க் நகரில் உள்ள மோட்டார் வாகனத் தொழிற்சாலை மீது இன்று ரஷ்யப் போர் விமானங்கள் குண்டுவீசியதில் அது வெடித்து அந்தப் பகுதியில் கரும்புகையுடன் தீப்பிழம்பு எழுந்தது.
தினிப்ரோ நகரில் ரஷ்ய விமானப்படை குண்டு வீசித் தாக்கின. குண்டுகள் வெடித்து அப்பகுதியில் தீப்பிழம்பு வானில் எழுந்த காட்சி வெளியாகியுள்ளது.
இவானோ பிராங்கிவ்ஸ்க் நகரிலும் பல இடங்களில் குண்டுவெடித்ததால் வானில் புகைமூட்டம் சூழ்ந்த காட்சி வெளியாகியுள்ளது.
செர்னோபில் அணுமின் நிலையத்தின் பணியாளர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிழக்குக் கடற்கரைத் துறைமுக நகரான மரியுபோலில் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை குண்டு வெடிப்பதாக மேயர் பாய்செங்கோ தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துவதாகவும், குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.