புது டில்லி: இந்தியா தனது நிதிநிலையை நிர்வகிப்பது சிறப்பாக உள்ளதாகவும், அதே சமயம் உலகளவில் எரிபொருட்கள் விலை உயர்வு இந்திய பொருளாதாரத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.,) நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறினார்.
ரஷ்யா – உக்ரைன் போரின் தாக்கம் குறித்த ஊடக சந்திப்பில் கிறிஸ்டலினா ஜார்ஜீவா இதனை தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது: இந்தியப் பொருளாதாரத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவது எரிபொருள் விலைகள் தான். இந்தியா எரிபொருளுக்கு இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ளது. அதன் விலை அதிகரித்து வருவது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதே சமயம் இந்தியா அதன் நிதிநிலையை சிறப்பாக நிர்வகிக்கிறது. சவாலை சமாளிக்கக் கூடியளவு நிதிநிலைமை உள்ளது.
எங்களின் உறுப்பினர்களுக்கு நாங்கள் கூறும் அறிவுரை முதலில் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படக்கூடிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். எரிபொருள் விலை மட்டுமின்றி, உணவு பொருள் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் தேவை. உதவி தேவைப்படக் கூடியவர்களுக்காக அரசு நிதி செலவிடுவதை இலக்காகக் கொள்ள வேண்டும். நாங்களும் பிரச்னைகளை சமாளிக்கின்ற நிதிக் கொள்கையை கொண்டு வரும் பணியில் உள்ளோம். என தெரிவித்தார்.
Advertisement