உக்ரைன் தலைநகர் கீவ்க்கு வடகிழக்கே 64 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்திருந்த ரஷ்ய ராணுவ பீரங்கி வாகனங்கள் அங்கிருந்து பிரிந்து மேலும் வடக்கு நோக்கி வெவ்வேறு பகுதிகளுக்கு நகர்ந்துள்ளன.
இதனை காண்பிக்கும் செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னர் கீவ் நகரில் இருந்து 10கி.மீ தொலைவிலேயே அமைந்துள்ள அண்டனோவ் விமான நிலையத்திற்கு அருகேயே அந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன.
அவற்றில் சில நவீன ரக பீரங்கி வாகனங்கள் தலைநகர் கீவில் இருந்து சுமார் 62 கிலோமீட்டர் தூரத்திலுள்ள லுபியன்கா அருகே வனப்பகுதிகளில் தாக்குதலை எதிர்கொள்ள தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
மேலும் சில வாகனங்கள் அன்டனொவ் விமான நிலையத்தை சுற்றி இருக்கும் நகரங்களுக்குள் இடம்பெயர்ந்துள்ளன.
இதனிடையே ரஷ்ய துருப்புக்களின் டாங்கிகளில் சில சேற்றுக்குள் புதைந்ததாலும், சில வாகனங்கள் எரிபொருள் தீர்ந்ததாலும் அவை அந்தந்த பகுதிகளில் அப்படியே விட்டுச்செல்லப்பட்டிருப்பதாக பெலாரஸ் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.