புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்தது. அப்போது யோகி ஆதித்யநாத் முதல்வராக நியமிக்கப்பட்டார். அதன்பின், மாபியாக்கள், ஊழல் புகாரில் சிக்கியவர்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் ஆதித்யநாத் புல்டோசர் மூலம் இடித்து தள்ளினார். அதனால், ‘புல்டோசர் ஆதித்யநாத்’ என்று அவரை அழைக்கத் தொடங்கினர். இந்நிலையில், உ.பி. தேர்தலில் மீ்ண்டும் தனிப்பெரும்பான்மை கட்சியாக பாஜக உருவெடுத்து தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைக்கிது. இதுகுறித்து பாஜக மக்களவை எம்.பி.யும் நடிகையுமான ஹேமமாலினி நேற்று கூறியதாவது:
உ.பி. தேர்தலுக்கு முன்பு பாஜக மீண்டும் ஆட்சி அமைக்காது என்று பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சியினர் முன்வைத்தனர். ஆனால், உ.பி.யில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதை கட்சி தலைவர்கள் அறிந்திருந்தனர். ஏனெனில் உ.பி.யில் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சிக்காக பாஜக பணியாற்றியது. அதனால் பாஜக மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். முதல்வர் ஆதித்யநாத்தின் புல்டோசருக்கு முன்னால் சைக்கிள் (அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி சின்னம்) மட்டுமல்ல வேறு எந்தப் பொருளும் வர முடியாது. அவற்றை புல்டோசர் நொறுக்கிவிட்டது.
இவ்வாறு ஹேமமாலினி கூறினார்.
– பிடிஐ