லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பாஜகவுக்கு மக்கள் வாக்குகளை அள்ளி வழங்கியதற்கு இந்து, முஸ்லிம் என்றெல்லாம் பாரபட்சமில்லாமல் அனைவருக்குமான வளர்ச்சித் திட்டங்களை பாஜக செயல்படுத்தியதே காரணம் என்று பாஜக எம்.பி. சதீஷ் மஹனா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், உத்தராகண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. உத்தரப் பிரதேசத்திற்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் மணிப்பூர் மாநிலத்திற்கு இரு கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது.
இந்த 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக 272 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் 120 இடங்களில் சமாஜ்வாதி முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் உ.பி.வெற்றி குறித்து பாஜக எம்.பி., சதீஷ் மஹனா, “நாங்கள் இந்து, முஸ்லிம் பேதம் பார்க்கவில்லை. எங்களின் நலத்திட்டங்கள் அனைவருக்குமானது. நாங்கள் எல்லோருக்குமாக வேலை செய்கிறோம். பிரதமர் மோடியும், முதல்வர் யோகியும் எல்லோருக்குமான நலத்திட்டங்களை செயல்படுத்தியதால் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறோம். உத்தரப் பிரதேசம் மாஃபியாக்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டுள்ளது.
இனி உத்தரப் பிரதேச மாநிலத்தின் வளர்ச்சி இன்னும் வேகம் பெறும். ஐடி துறை முதல் எலக்ட்ரானிக் துறை வரை உத்தரப் பிரதேசத்திற்கு என நிறைய திட்டங்களை வைத்துள்ளோம். உ.பி.க்காக இனி கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது” என்றார்.