சண்டிகர்:
பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி முதன்முறையாக அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து வரும் 16ம் தேதி பஞ்சாப் முதலமைச்சராக, அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பகவந்த் மான் பதவியேற்க உள்ளார்.
முன்னதாக சண்டிகரில் நேற்று நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டசபைக் கட்சித் தலைவராக பகவந்த் மான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் பேசியதாவது:
அனைத்து எம்எல்ஏக்களும் சண்டிகரில் தங்காமல், உங்கள் தொகுதிகளில் அதிகபட்ச நேரத்தை செலவிடுங்கள். அமைச்சர் பதவிக்கு ஏங்க வேண்டாம். யாரும் வருத்தப்பட வேண்டாம், நீங்கள் எல்லாம் கேபினட் அமைச்சர்கள்தான்.
கட்சிக்கு வாக்களிக்காதவர்களுக்கும் வேலை செய்ய வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன். பஞ்சாபியர்களின் எம்.எல்.ஏ.க்கள் நீங்கள். அவர்கள் உங்கள் அரசாங்கத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்… மத்திய பிரதேச சட்டசபை தேர்தலிலும் பாஜக சாதனை படைக்கும்- உமா பாரதி நம்பிக்கை