உள்ளாட்சித் தேர்தலின் போது நடந்த தாக்குதல், நில அபகரிப்பு உள்ளிட்ட 3 வழக்குகளில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையிலிருந்து ஜாமீனுல் இன்று காலை வெளியே வந்தார். மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும் திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் ஜெயக்குமார் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறையிலிருந்து வெளியே வந்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது, “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சமூக விரோதிகள் வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முயன்றனர். கள்ள ஓட்டை தடுக்க முயன்ற என் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ளனர். திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, மக்களுக்கு நல்லது எதுவும் செய்யவில்லை. ஹிட்லர்,முசோலினி ஆகியோரின் மரு உருவம் போல் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுகிறார். யாராலும், அதிமுகவை அழிக்க முடியாது” என்றார்.