கீவ்: உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா அந்நாட்டின் தலைநகர் கீவ் நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. வழியில் உள்ள நகரங்களை எல்லாம் தன்வசப்படுத்தியும் வருகிறது. மெலிடோபோல் என்ற நகரைக் கைப்பற்றிய ரஷ்யா அந்நகரின் மேயர் இவா ஃபெடரோவை கடத்திச் சென்றது. ரஷ்யப் படைகளின் நெருக்கடிக்கு இணங்க மறுத்ததால் அவரை படையினர் கடத்திச் சென்றதாக உக்ரைன் நாடாளுமன்றத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 நாள்; 1200 பேர் பலி: அதேபோல் தொடர்ந்து 11 நாட்களாக துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்யப் படைகள் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு தண்ணீர், மின்சாரம் இல்லை. மரியுபோலில் ரஷ்யா தொடர் குண்டு வீச்சிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால் மரியுபோலில் இதுவரை 1200 அப்பாவி பொதுமக்கள் பலியானதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
இதுவரை ரஷ்ய தாக்குதலில் பாதிக்கப்படாத பத்திரமான இடமாக நிப்ரோ நகரம் கருதப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்நகரைக் குறிவைத்து 3 ஏவுகணைகளை ரஷ்யா ஏவியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். ஒரு ஷூ தொழிற்சாலை முற்றிலுமாக சேதமடைந்தது. பலர் படுகாயமடைந்துள்ளனர். அதேபோல் கார்கிவ் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான தங்குமிடம் தகர்க்கப்பட்டுள்ளது. அங்கு 330 பேர் இருந்ததாகத் தெரிகிறது. அவர்களின் நிலை என்னவானது என்ற விவரமில்லை.
சிரியாவுக்கு அழைப்பு: ரஷ்யப் படைகளின் தாக்குதலிலேயே உக்ரைன் உருக்குலைந்து வருகிறது. இந்நிலையில் தாக்குதலில் துணை நிற்க சிரியாவிலிருந்து தன்னார்வலர்களை ரஷ்யா அழைத்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக களத்தில் நேட்டோ வீரர்களை இறக்கினால் அது உலகப் போராக மாறும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அஞ்சி வருகின்றன. ஆதலால் ஆயுத, நிதி, உளவு உதவிகளுடன் நிறுத்திக் கொண்டுள்ளன. இந்நிலையில் மத்திய தரைகடல் நாடான சிரியாவை ரஷ்யா போரில் இழுத்துவிடுவது போல் அந்நாட்டு தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது மேற்கத்திய நாடுகளை கவலையடையச் செய்துள்ளது. உக்ரைன் ரஷ்யா மோதல் அந்த இரு நாடுகளைத் தாண்டி எங்குமே பரவாமல் இருக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன.
25 லட்சம் பேர் வெளியேறினர்.. இதுவரை உக்ரைனிலிருந்து 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மேற்கு எல்லையில் உள்ள போலந்து நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
போலந்துக்கு ஜெலன்ஸ்கி நன்றி.. இதற்கிடையில் போலந்து அதிபர் ஆண்ட்ரஜெஸுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், “உங்களை யாரேனும் துன்புறுத்தும் வேளையில் ஆறுதலாக சாய்ந்து கொள்ள ஒரு தோள் அவசியம் வேண்டும். எங்கள் மீது ரஷ்யா படையெடுத்த போது, எனக்கு உதவிக்கரம் நீட்டியது போலந்து. சகோதரரே உங்களின் மக்கள் எதிரிகள் சூழ தனித்து விடப்படமாட்டார்கள் என்ற நம்பிக்கையை போலந்து அளித்தது. நீங்கள் எங்கள் மக்களை உங்கள் நாட்டின் குடும்பங்கள் வாயிலாக வறவேற்றுள்ளீர்கள். சகோதர பாசத்துடன் அவர்களை நடத்துகிறீர்கள்.போலந்து சகோதர, சகோதரிகளே நாம் வலுவான பிணைப்பை உருவாக்கியுள்ளோம் என்றார்.