புதுடெல்லி: டெல்லி கோகல்புரி குடிசைப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 60 குடிசைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின.
இந்தச் சம்பவம் குறித்து வடகிழக்கு டெல்லி காவல்துறை துணை ஆணையர் தேவேஷ் குமார் கூறுகையில், “அதிகாலை ஒரு மணியளவில் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. உடனே கோகல்புரி பகுதிக்கு தீயணைப்பு வாகனங்களுடன் சென்றோம். அங்கு சென்றபின்னர் தான் விபத்தின் வீரியம் புரிந்தது. உடனடியாக கூடுதல் தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டன. 13 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இருந்து அதிகாலை 4 மணியளவில் தான் தீ அணைக்கப்பட்டது” என்றார். இந்த விபத்தில் மொத்தம் 60 குடிசைகள் முற்றிலுமாக தீக்கிரையாகின.
முதல்வர் கேஜ்ரிவால் இரங்கல்.. டெல்லி கோகல்புரி தீ விபத்து குறித்து முதல்வர் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாலையிலே தீ விபத்து குறித்த சோகமான செய்தியை அறிந்தேன். நானே சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்கவுள்ளேன் என்று பதிவிட்டிருந்தார்.
7 பேர் உயிரைப் பறித்த இச்சம்பவத்திற்கான காரணம் என்னவென்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
பஞ்சாப் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது. அங்கு மொத்தமுள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு வரும் 16-ம் தேதி பதவியேற்கிறது. மாநிலத்தின் புதிய முதல்வராக பகவந்த் மான் பதவியேற்கிறார்.
இந்நிலையில் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள டெல்லியில் நடந்துள்ள இத்துயரச் சம்பவம் கட்சியினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.