கீவ்,
உக்ரைன் மீதான போர் இரண்டு வாரங்கள் கடந்து 16-வது நாளாக போர் தொடர்ந்து வரும் நிலையில், போருக்கு பின்னர் ரஷியா திரும்ப நேர்ந்தால் கண்டிப்பாக தாங்கள் கொல்லப்படுவோம் என உக்ரைன் இராணுவத்திடம் சிக்கிய ரஷிய வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் இராணுவத்திடம் சரணடைந்த ரஷிய வீரர்கள் சிலர் கீவ் நகரில் ஊடகங்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஒரு ரஷிய இராணுவ வீரர்,போருக்கு பின் சக வீரர்களால் கண்டிப்பாக கொல்லப்படுவோம் என்பதை அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக போருக்கு புறப்பட்ட நாள் முதல், தாங்கள் இறந்ததாகவே கருதப்படுவதாகவும், சமீபத்தில் பெற்றோரை தொடர்புகொண்ட போது, எங்களுடைய இறுதிச்சடங்குகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக பெற்றோர் கூறினர் என அவர் தெரிவித்தார்.
போருக்கு பின்னர் சரணடைந்துள்ள வீரர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள், அவ்வாறு நேர்ந்தால் சொந்த இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுவது உறுதி என அந்த வீரர் தெரிவித்தார்.
இதனிடையே, ரஷிய துருப்புகளிடம் இருந்து 20 வயது மதிக்கத்தக்க ஒரு உக்ரேனிய இளம்பெண்ணை பாதுகாக்க முயன்ற ரஷிய அதிகாரி ஒருவர் சக வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
உக்ரைன் மீதான போர் இரண்டு வாரங்கள் கடந்தும் நீடித்து கொண்டிருக்கிறது. ரஷிய தரப்பில் 12,000 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் நிர்வாகம் தெரிவித்து வருகிறது. ஆனால், இதுவரை 498 பேர்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளதாக ரஷிய தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.