தனுஷ் – சத்யஜோதி ஃபிலிம்ஸ் கூட்டணியில் தொடரி, பட்டாஸ் படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக வெளியாகியிருக்கும் திரைப்படம் மாறன். இந்த முறை ‘ஹோம் தியேட்டரில்’. டிஸ்னி ஹாட் ஸ்டாரில் நேற்று(11 மார்ச்) மாலை 5 மணிக்கு வெளியாகியிருக்கிறது. படத்தை இயக்கியிருப்பவர் துருவங்கள் 16, மாஃபியா படங்களின் இயக்குநரான கார்த்திக் நரேன்.
மாறனின் கதை டிரெயிலரிலே சொன்னதுதான். ஓர் அரசியல்வாதியின் ஊழலை வெளிக்கொணரும் நேர்மையான ஊடகவியலாளன் ஒருவனின் போராட்டமே படம். என்ன ஊழல், எந்த அரசியல்வாதி என்பதும் அதை மாறன் ஆகிய தனுஷ் எப்படி வெளிக்கொண்டுவந்தார், அதனால் என்ன சிக்கல்களை சந்தித்து எப்படி மீண்டார் என்பதே திரைக்கதை. இந்தப் படத்துக்கு ஸ்பாய்லர் எல்லாம் ஒன்றுமில்லை என்றாலும் இதற்கு மேல் கதை பற்றி சொல்ல தேவையில்லை.
சில காட்சிகளை மட்டும் பார்க்கலாம்.
ஓப்பனிங் காட்சியில் பாரில் குடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். அவரிடம் பிரச்னை செய்ய வருகிறார்கள் அடியாட்கள். அவர் மண்டையில் பாட்டிலை உடைத்தாலும் மாறன் ரியாக்ட் செய்யாத அளவுக்கு போதை. ஒரு கட்டத்தில் சண்டை செய்கிறார். போலீஸ் வருகிறது. ஒரு ஃப்ளோவில் அவர்களில் ஒருவரையும் அடிக்கிறார் தனுஷ். போலீஸ் மேலயே கை வைக்கிறியா என ஸ்டேஷனுக்கு அள்ளிச் செல்கிறார்கள். அங்கு வரும் கதாநாயகி போலீஸைப் பார்த்து ‘I will sue you’ என்கிறார். போதையில் சண்டை செய்து, போலீஸையே அடித்த ஒருவனை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்ததற்கா இந்த கேஸ் என நீதிபதி கேட்டால் மாளவிகா என்ன சொல்வார் எனத் தெரியவில்லை.
தனுஷ் ஒரு மீடியா அலுவலகத்துக்கு இண்டெர்வியூக்கு செல்கிறார். அங்கு உண்மையை மட்டுமே தனக்கு எழுத தெரியுமென்றும், பாஸிட்டிவ் செய்திகளை மட்டுமே எழுத விரும்புவதாகவும் சொல்கிறார். அப்போது 60 வயது சீனியர் ஒருவருடன் முட்டிக் கொள்கிறது. அந்த சீனியர் ட்விட்டரில் நடிகை ஒருவரின் கர்ப்பம் பற்றி ட்வீட் செய்வதாகவும் அதற்குத்தான் 10000 லைக்ஸ் வருமென்றும் சொல்கிறார். உடனே தனுஷ், மாணவர்கள் பற்றி ஒரு ட்வீட் செய்கிறார். எதற்கு முதலில் 10000 லைக்ஸ் என்பதுதான் போட்டி. இப்போது அந்த கான்ஃபரன்ஸ் ஹாலில் இருக்கும் திரையில் இரண்டு ட்வீட்களும் பெரிதாக தெரிய, லைக்ஸ் கவுண்ட் கிராபாக தெரிகிறது. சரி, ஆடியன்ஸ் நமக்காக இப்படிக் காட்டுவதாக நினைத்தால், ஒட்டுமொத்த அலுவலகமும் அந்தத் திரையில்தான் பார்க்கிறது. சினிமா நடிகை பற்றிய செய்தி உண்மைதான், அதுவும் நெகட்டிவ் ஆக ஒன்றுமில்லை. தனுஷ் கொள்கைபடி அதில் தவறேதுமில்லை. ஒருவேளை பொழுதுபோக்கு செய்திகளையே வெறுக்கிறார்போல என நினைத்தால், ட்விஸ்ட். போட்டியில் மாணவர் சக்தியால் தனுஷ் வெற்று பெற்றுவிடுகிறார். வெற்றி பெற்ற அந்த நொடியில் தனுஷ் ஆட ஆரம்பிக்கிறார். ‘ஏய் இது பொல்லாத உலகம்’. என்ன மாறன்… இதைத்தானே அந்த சீனியரும் சொன்னார்?
அடுத்தக் காட்சி. முன்னாள் அமைச்சர் ஒருவரை விசாரிக்க இன்ஸ்பெக்டரான தன் நண்பனிடம் கோரிக்கை வைக்கிறார் தனுஷ். சரியான ஆதாரமில்லாமல் அப்படி செய்ய முடியாது என்கிறார் அந்த திறமையான… ஒரு நிமிடம்… அந்த போலீஸ். அடுத்த காட்சியில் தனுஷ் பார்க்காத ஒரு காரைப் பார்த்ததாக சொல்லி, அந்த வண்டியின் எண்ணைச் சொல்கிறார். அந்த வண்டி முன்னாள் அமைச்சர் பெயரில் பதிவாகியிருக்கிறது. இப்போது அந்த போலீஸுக்கு ஆதாரம் கிடைத்துவிட்டதாம். பெரிய அதிகாரியிடம் பேசி முன்னாள் அமைச்சரை விசாரிக்க அனுமதி வாங்குகிறார். அடுத்தக் காட்சியில் அவரும் தனுஷும் (ஆமா தனுஷ் எதற்கு?) முன்னாள் அமைச்சர் வீட்டுக்கு செல்ல, அங்கே அவர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்க ‘சர்ச் வாரண்ட்’ இருக்கு என்கிறார். விசாராணை செய்ய அனுமதி வாங்கினால் சர்ச் வாரண்ட்டா தருவார்கள்? அதுவும் தனுஷுடன் சென்று சர்ச் செய்ய…
சரி. இன்னொரு காட்சியை… இப்படியே போனால் படம் முழுக்க சொல்ல வேண்டியிருக்கும். லோக்கல் விமானங்களில் விஸ்கி கொடுப்பது, ‘இப்படிலாம் நடக்கும்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல’ போன்ற டிரேட்மார்க் க்ளிஷே விஷயங்கள் படம் முழுக்க ஏராளம். படம் முழுக்க ஒரு முக்கிய எவிடென்ஸையே தேடுகிறார்கள் அல்லது ‘கொடுடா’ எனக் கேட்கிறார்கள்.அந்த எவிடென்ஸ் என்னவென்றுதான் தெரியவில்லை. மின்னணு வாக்குப் பதிவு ஊழல் எனச் சொல்லிவிடுகிறார்கள். பின், ஒரு பத்திரிகையாளரை வைத்து அதில் ஊழலே செய்ய முடியாது, உச்சநீதிமன்றம் முன்பாகவே நிரூபிக்கப்பட்டுவிட்டது என ஒரு பிரசாரமும் செய்கிறார்கள். இயக்குநரின் நோக்கம் என்ன என்பதுதான் புரியவில்லை.
மாளவிகாவைத் தவிர அமீர், ஆடுகளம் நரேன் உட்பட பெரும்பாலானோரின் நடிப்பு கச்சிதம். 2000 ஆண்டு பத்திரிகையாளர் சத்தியமூர்த்தியாக நடித்திருக்கும் ராம்கியிலிருந்து தொடங்குகிறது திரைக்கதை. பிறகு, பத்திரிகையாளர் மாறனாக நடித்திருக்கும் தனுஷ் வளர்ந்து 2021 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குவதாக காண்பிக்கப்படுகிறது. ஆனால், திரைக்கதையோ 2000 ஆண்டிலிருந்து 21 வருடங்கள் கழித்து இல்லாமல் 21 வருடத்துக்கு முன்பு உள்ளதுபோல் பழமையான காட்சிகளாக உள்ளன.
ராம்கி முதல் காட்சியில் வெளியிடும் செய்தியில் பள்ளியின் நிர்வாகி, என்னமாதிரியான அலட்சியத்தால் குழந்தைகள் மரணத்துக்கு காரணமானவர் என்பது தெரியவில்லை. அதேபோல், ஸ்டிங் ஆபரேஷன் ரேஞ்சுக்கு ஃபைவ்ஸ்டார் ஹோட்டல் அறையில் ஆடியோவை எல்லாம் ஒட்டு கேட்டு டேப் செய்யும் தனுஷ் அதை எப்படி செய்தியாக வெளியிட்டார் என்பதும் மர்மமாக உள்ளது. அதுவும், டிவிட்டரில் செய்தி வெளியிடுகிறார். ஆதாரங்களையும் அதிலேயே வெளியிட்டிருக்கலாமே என்று கேட்க தோன்றுகிறது. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்ததுமே தங்கையின் மரணம் குறித்து ஈஸியாக கண்டுபிடித்திருக்கலாம். ஆனால், சஸ்பென்ஸ் வைக்கவேண்டும் என்ற கட்டாயத்திற்காகவே தனுஷ் குடித்து குடித்து கோமாவிலேயே கிடக்கிறார். ‘ரைட்டர்’ படத்தில் சமுத்திரக்கனியின் தொப்பை கூட நடித்திருக்கும். ஆனால், இப்படத்தில் ‘தொப்பை’ விழும் அளவுக்கு உழைக்காமல் இருந்திருக்கிறார் என்பது சமுத்திரக்கனியின் சுமாரான நடிப்பின் மூலம் தெரிய வருகிறது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் இருளிலேயே எடுக்கப்பட்டதால் படத்தில் வருவதுபோல நம் கண்களிலும் அமிலப்பவுடரை தூவியதுபோல் உள்ளது. படத்தில் எடிட்டிங் ஓரளவுக்கு திரைக்கதையின் தொய்வைக் கட்டுப்படுத்துகிறது. பொல்லாத உலகம் பாடலில் மட்டும் ஜி.வி.பி. ஜொலிக்கிறார். சண்டைக் காட்சிகள் நன்றாக இருந்தாலும் அதற்கான காரணங்கள் சப்பென போவதால ஈர்க்கவில்லை. க்ளைமாக்ஸில் ‘ஹோட்டல் பில்’ குத்தியிருக்கும் கம்பி போல ஒரு ஈட்டியைக் காலில் குத்திய பின்னும் அமீர் செய்யும் ரணகளங்கள் காமெடிக்கான ரீப்ளேஸ்மெண்ட்.
வெற்றி மாறனுடன் தனுஷ் சேர்ந்தால்தான் மேஜிக் நிகழ்கிறது என சமூக வலைதளத்தில் அடிக்கடி சொல்லப்படுவதுண்டு. இந்தப் படத்தில் அவர் பெயரில் பாதி இருக்கிறது. ஆனால், வெற்றி இல்லை.
தனுஷ் இப்போது ஹாலிவுட்டில் நடிப்பவர். இந்தியா முழுக்க முகம் தெரிந்தவர். அவரது ஒவ்வொரு புராஜெக்டையும் கவனமாகச் செய்ய வேண்டிய அவசியமும் பொறுப்பும் அவருக்கிருக்கிறது. மாறன் போன்ற வழக்கமான, சுமாரான கதையை அவர் எப்படித் தேர்ந்தெடுத்தார் என்பது தான் தெரியவில்லை. விரைவில், ஃபார்முக்கு வந்து ரசிகர்களைக் குஷிப்படுத்துங்கள் தனுஷ். ஏனெனில், நீங்கள் ஒரு நிகரற்ற கலைஞன்.