"சர்"ருன்னு சீறிப் பாய்ந்து பாகிஸ்தானுக்குள் போய் விழுந்த இந்திய ஏவுகணை.. !

இந்திய ஏவுகணை
ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தான் எல்லைக்குள் போய் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வார தொடக்கத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தற்செயலான விபத்து என்றும், இதற்காக பாகிஸ்தானிடம் இந்தியா ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

மார்ச் 9ம் தேதி இந்த ஏவுகணை தவறுதலாக பாய்ந்து சென்று பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்துள்ளது. ஹரியானாவில் உள்ள
சிர்சா
நகரிலிருந்து இந்த ஏவுகணை பாய்ந்து சென்று பாகிஸ்தானில் உள்ள மியான் சன்னு என்ற நகருக்கு அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. வழக்கமான தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது அந்த ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டு விட்டது. இதுதொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்புத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பகுதியிலிருந்து சீறிப் பாய்ந்த அந்த ஏவுகணை 40,000 அடி உயரத்தில், பாகிஸ்தான் எல்லைக்குள் 100 கிலோமீட்டர் தூரம் அளவுக்கு பாய்ந்து சென்று விழுந்துள்ளது. அந்த ஏவுகணையில் எந்தவிதமான ஆயுதமும் பொருத்ப்பட்டவில்லை. எனவே ஏவுகணை வெடிக்கவில்லை.

இந்த விவகாரம் குறித்து அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரை நேரில் அழைத்து விளக்கம் கேட்டது. இதுதொடர்பாக பாகிஸ்தான் தரப்பும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடந்தால் கசப்பான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். இதுபோல மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறும் பாகிஸ்தான், இந்தியாவை எச்சரித்துள்ளது.

ஆனால் இந்த ஏவுகணை பாய்ந்த விதம் குறித்து பல்வேறு குழப்பங்களும் எழுந்துள்ளன. ஒரு ஏவுகணையை ஏவுவது என்பது தற்செயலாக நடக்க முடியாது. பல்வேறு விதமான ஆயத்த நிலைகள் இருக்கும். டார்கெட் முடிவு செய்யப்பட வேண்டும். பல்வேறு விதமான ஸ்விட்ச்சுகளை இயக்க வேண்டும். இதெல்லாம் நடந்தால்தான் ஏவுகணையை ஏவ முடியும். அப்படி இருக்கும்போது இந்த ஏவுகணை தற்செயலாக எப்படி ஏவப்பட்டது என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதேசமயம், இந்த விவகாரத்தை இந்தியாவும் சரி, பாகிஸ்தானும் சரி நிதானமாகவும், பொறுப்பாகவும் அணுகியுள்ளன. இந்தியா தனது தரப்பு தவறை ஒத்துக் கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானும் இதை பெருந்தன்மையைாக விட்டு விட்டது என்பது முக்கியமானது. அதேசமயம், இரு நாடுகளுமே அணு ஆயுத சக்திகளாக இருப்பதால் ஏவுகணைகளின் ஆயத்த நிலை குறித்து மிக மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்று பாதுகாப்புத்துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, இந்த ஏவுகணை பாய்ச்சலில் பாகிஸ்தான் தரப்பில் ஒரு வீடு சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான இழப்பீட்டை இந்தியா வழங்க வேண்டும் என்றும் இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.