மேரிலாண்ட்: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பன்றி இதயம் பொருத்தப்பட்ட அமெரிக்கர், சிகிச்சை முடிந்த 60 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்தார்.
அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரைச் சேர்ந்த 57 வயதான டேவிட் பென்னட் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு காரணமாக மேரிலேண்ட் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செயற்கை சுவாசக் கருவிகளுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். தீவிர இதய பாதிப்பால் பாதிக்கப்பட்ட பென்னட்டின் உடல், மனிதனின் இதயத்தை மாற்று இதயமாக பெற ஒத்துழைக்கவில்லை.
அவரது மோசமான உடல் நிலை காரணமாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை அவருக்கு பொருத்த மேரிலாண்ட் பல்கலைக்கழக மருத்துவர்கள் ஒருமனதாக முடிவு செய்தனர்.
செயற்கை சுவாசக் கருவிகளுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பென்னட்டுக்கு, பன்றியின் இதயத்தை மேரிலாண்ட் மருத்துவர் கிரிஃபித் ஜனவரி மாதம் பொருத்தினார்.
”உயிர்வாழ எத்தனை ஆண்டுகள் இந்த மாற்று இதயம் உதவும் என்று தெரியாது. ஆனால். மாற்று அறுவை சிகிச்சையில் இது ஒரு பெரும் சாதனையாக கருதப்படுகிறது” என்று அமெரிக்க மருத்துவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், பென்னட்டின் உடல் நிலை சில நாட்களுக்கு முன்னர் மோசமானதாகவும், இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 9-ஆம் தேதி பென்னட் உயிரிழந்ததாகவும் மேரிலாண்ட் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பன்றி இதயம் பொருத்தப்பட்ட இரண்டு மாதங்களில் பென்னட் உயிரிழந்திருக்கிறார். ”உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பன்றி இதயம் பொருத்தப்பட்டது, உலகளவில் நிலவும் மாற்று உறுப்பு தட்டுப்பாடுகள் குறைவதற்கான பாதையில் நாம் ஒருபடி முன்னெடுத்து வைத்திருக்கிறோம்” என்று மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், பென்னட் உயிரிழந்திருப்பது மருத்துவ உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.