ரசாயன ஆயுதங்களை அனைத்து நாடுகளும் தடை செய்ய வேண்டும்- ஐ.நா.சபையில் இந்தியா வலியுறுத்தல்

நியூயார்க்:
உக்ரைனில் ரசாயன ஆயுதங்கள் அமெரிக்கா உதவியுடன் தயாரிக்கப்படுவதாக ரஷியா குற்றம் சாட்டியது. அதுதொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தியது.
அதன்படி நேற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. அப்போது உக்ரைன் உயிரியல், ரசாயன ஆயுதங்களை உருவாக்குகிறது என்ற ரஷியாவின் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஐ.நா.சபை தெரிவித்தது.
இக்கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது:-
உயிரியல், ரசாயன ஆயுதங்களை தடை செய்யும் ஒப்பந்தத்துக்கு கீழ்படியுமாறு அனைத்து நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்தது. உயிரியியல் மற்றும் நச்சு ஆயுதங்களை முழுமையாக தடை செய்யப்படுவதை அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும்.
உக்ரைனில் நிலவும் மனிதாபிமான நிலை குறித்து இந்தியா கவலை அடைந்திருக்கிறது. ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் நேரடி பேச்சுவார்த்தை போர் நிறுத்தத்துக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். போர் நிறுத்தத்துக்கு பேச்சுவார்த்தை தவிர வேறு வழியில்லை.
ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும். நாடுகளின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டையும் அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.