டோக்கியோ,
ஜப்பானில் உள்ள பள்ளிகள், மாணவிகள் பள்ளிக்கு குதிரை வால் (Ponytails) வகை சிகையலங்காரத்தில் வருவதற்கு தடை விதித்துள்ளது. குதிரை வால் வகை சிகையலங்காரம் அணிந்து வரும்போது மாணவிகளின் கழுத்து பகுதி மாணவர்களுக்கு பாலியல் உணர்ச்சியை தூண்டும் என்பதால் இந்த தடை விதித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
இது போன்ற வினோதமான விதிகள் ஏற்படுத்தப்படுவது ஜப்பானில் இது முதல் முறை இல்லையென்றாலும் இந்த தடைக்கு அங்கு பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இதுகுறித்து கூறிய நடுநிலைப் பள்ளி ஒன்றின் முன்னாள் ஆசிரியர் மோடோகி சுகியாமா, நான் எப்போதும் இதுபோன்ற விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற விதிகளுக்கு போதுமான எதிர்ப்பு இல்லாததாலும் இது போன்ற விதிகள் சாதாரணமாகிவிட்டதாலும் மாணவிகள் அவற்றை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று கூறினார்.
சிலர் இந்த தடை பெண்கள் மீதான ஆண்களின் பார்வையை தவறாக திருப்பும் விதமான பின்னோக்கு சிந்தனை என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.