புதுடெல்லி:
இந்த ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக டூபிளசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான டூபிளசிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 10 ஆண்டுகள் விளையாடி உள்ளார். அவரை இந்த சீசனில் பெங்களூரு அணி ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது. தற்போது அவர் பெங்களூரு அணியின் 7வது கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். டி20 போட்டியில் டூபிளசிஸ் கேப்டனாக அணியை வழிநடத்துவது இதுவே முதல் முறை ஆகும்.
37 வயதான டூபிளசிஸ் ஐபிஎல் தொடரில் இதுவரை 100 போட்டிகளில் விளையாடி 2935 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த சீசனில் சென்னை அணிக்காக 633 ரன்கள் குவித்தார்.
புதிய கேப்டன் டூபிளசிசை முன்னாள் கேப்டன் விராட் கோலி வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘ஆர்சிபி அணியை டூபிளசிஸ் வழிநடத்திச் செல்வதற்கும் அவருக்குக் கீழ் விளையாடுவதற்கும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேக்ஸ்வெல் மற்றும் நாங்கள் தக்கவைத்துள்ள முக்கிய வீரர்களுடன், டூபிளசிஸ் தலைமை ஏற்பது ரசிகர்களுக்கு உற்சாகமாக இருக்கும்’ என்று கோலி தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசன் முடிந்ததும் ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியது குறிப்பிடத்தக்கது.