திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்திலிருந்து வாலிபர்கள் சிலர் வளைகுடா நாடுகளுக்கு சென்று பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்ததாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் இப்போது மேலும் ஒரு வாலிபர் ஐ. எஸ் .பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதனை செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
கேரளாவிலிருந்து எம்.டெக். படித்த வாலிபர் ஒருவர் வளைகுடா நாடுகளுக்கு சென்றார். அங்கிருந்து ஆப்கானிஸ்தான் சென்ற வாலிபர் அங்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தார்.
அவர்களுடன் இணைந்த பிறகு பல்வேறு தாக்குதலில் ஈடுபட்ட அவருக்கு பாகிஸ்தான் நபருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நபர் அவரது மகளை கேரள வாலிபருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். திருமண நாள் அன்று அந்த வாலிபர் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டார்.
திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் அந்த வாலிபர் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டார்.
இதில் அவர் பலியானார். இதுபற்றி மத்திய உளவுத்துறையினருக்கு தகவல் தெரியவந்தது. அவர்கள் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.