காங்கிரஸ் கட்சியில் இருந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் விலக உள்ளதாக வெளியான தகவலுக்கு அக்கட்சி மறுப்புத் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில், அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், பஞ்சாப் மாநிலத்தில், ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் படு தோல்வியைச் சந்தித்துள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியிடம் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.
இதே போல், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களிலும், காங்கிரஸ் கட்சி மாயமாகி போயுள்ளது. பாஜகவுக்கு அடுத்து தேசியக் கட்சி என்று பார்க்கப்படும் காங்கிரஸ் கட்சி, ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் தான் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விகளால், அக்கட்சித் தொண்டர்கள் மன வருத்தத்தில் நொந்து போயுள்ளனர். இதற்கிடையே தலைநகர் டெல்லியில், நாளை மாலை 4 மணி அளவில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று, கட்சியில் இருந்து, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் விலக உள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பான முடிவை நாளை செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு விளக்கமளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, இந்த தகவல் முற்றிலும் தவறானது என தெரிவித்துள்ளார்.