"என் கணவரின் இறப்பில் சந்தேகம் இருக்கிறது" – பிரேத பரிசோதனை செய்ய ஆட்சியரிடம் இளம்பெண் மனு

செங்கல்பட்டு அருகே 2 மாதத்திற்கு முன்பு இறந்த தன் கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு அளித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் வயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஞானசுந்தரம் – ஷபானா தம்பதியர். ஞானசுந்தரம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் கேட்டரிங் சர்வீஸ் சென்டரில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி இரவு தனது மனைவிக்கு போன் செய்த ஞான சுந்தரம், பொங்கலுக்கு வீட்டுக்கு வருவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜனவரி 12ஆம் தேதி ஞான சுந்தரத்தின் தம்பி சௌந்தரராஜனுக்கு போன் செய்த கேட்டரிங் சர்வீஸ் நிறுவனத்தினர், ஞான சுந்தரம் மயங்கி விழுந்து விட்டார். அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளோம் நீங்கள் உடனடியாக வரவேண்டும் என தெரிவித்துள்ளார். உடனே அங்கு சென்று பார்த்தபோது ஞான சுந்தரத்தின் வலதுபுற தலையிலும், உதடுகளிலும் வீங்கி இருந்தது. அவர் சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜனவரி 13ஆம் தேதி ஞான சுந்தரம் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
image
இதைத் தொடர்ந்து என் கணவரின் இறப்பில் எனக்கு சந்தேகம் உள்ளது. ஆதலால் என் கணவர் உடலை பிரேத பரிசோதனை செய்து தரும்படி மருத்துவர்களிடம் ஷபானா கேட்டுள்ளார். அதற்கு கொரோனா தொற்றால் அதெல்லாம் தற்போது தடை செய்துள்ளோம் இங்க கூட்டமா நிற்காதீர்கள் உடனடியாக உடலை எடுத்துக் கொண்டு கிளம்புங்கள் என அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டினார். அதற்குப் பயந்து ஷபானா உடலை கொண்டு வந்துள்ளார்.
ஒருவாரம் கழித்து அவர் தங்கியிருந்த அறையில் இருந்த ஞான சுந்தரத்தின் உடமைகளை எடுத்துவர சென்றபோது அப்படிப்பட்ட நபர் இங்கே வேலையே செய்யவில்லை என முன்னுக்குப்பின் முரணாக பதிலை தெரிவித்ததால், காவல் துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஷபானா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.